தடுப்பூசி செலுத்துவதில் காஞ்சிபுரம் மாவட்டம் முன்னுதாரணமாக விளங்குகிறது.. அமைச்சர் பாராட்டு...
ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற விழாவில் மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ரூபாய் 2.68 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 2.68 கோடி மதிப்பில் புதிதாக துணை சுகாதார நிலையங்கள், புற நோயாளி பிரிவு கட்டிடங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார கட்டிடங்கள், செவிலியர் குடியிருப்பு கட்டிடம், சித்தா பிரிவு கட்டிடம் ஆகியவை கட்டப்பட்டன. அந்த கட்டிடங்களை பொதுமக்கள் பயனுக்காக இன்று திறக்கப்பட்டன. ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதிலும் இதுபோன்று கட்டப்பட்ட கட்டிடங்கள் வாரத்திற்கு இரண்டு மாவட்டங்கள் என்ற முறையில் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்று கட்டிடங்கள் தொடர்ந்து திறக்கப்பட்டு கொண்டு வருகிறது. எனவே, கடந்த ஆண்டு 800 கோடிக்கு மேல் செலவில் ஆரம்ப சுகதார நிலையங்களுக்கு தேவையான கட்டிடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 2011- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபையில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி திட்டத்தினை அறிவித்தார்கள். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரி, ஒரு இயற்கை மருத்துவ கல்லூரிகள், 34 தனியார் மருத்துவ கல்லூரி என மொத்தம் 71 மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், துணை ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை என மொத்தம் 11,333 மருத்துவ கட்டமைப்புகள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும், இன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் 679 மருத்துவமனைகள் மூலம் விபத்தில் சிக்கிய 1,35,416 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், காரப்பேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனைகள் தரம் உயர்த்தி செயல்படுத்த 218 கோடி செலவில் பேரறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கட்டிடபணிகள் நடைபெற்று கொண்டு இருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளப்படி, தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 708 நகர்புற நலவாழ்வு மையங்கள், 21 மாநகராட்சி, 61 நகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம், நாய்க்கன்பேட்டை, பஞ்சுப்பேட்டை, பிள்ளையார்பாளையம், செவிலிமேடு ஆகிய 5 இடங்களில் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளன. இதற்கான மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர் பணியாளர்களை நிரப்பும் பணி நடைபெறுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம், கோவிட் பெருந்தொற்று காலத்தில் பொது மக்களுக்கு தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டு, கோவிட் தடுப்பூசி போடும் பணியில் 116 சதவீத இலக்க எட்டி சாதனைப் படைத்து முன்னுதாரணமாக விளக்குகிறது என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, மருத்துவ மற்றும் பொது சுகாதார இயக்குநர் டாக்டர். செல்வவிநாயகம், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை மனோகரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர். பிரியாராஜ், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu