தைவான் நாட்டைச் சேர்ந்தவர் வீட்டில் அமெரிக்க டாலர்கள், 25 பவுன் நகைகள் கொள்ளை...
மாம்பாக்கம் பகுதியில் தைவானை சேர்ந்த நபர் தங்கியிருந்த வீடு.
தொழிற்சாலைகளின் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய பல பகுதிகளில் பன்னாட்டு தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
பன்னாட்டு தொழிற்சாலைகளின் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க பல்வேறு நாடுகளில் சேர்ந்த நபர்கள் பல்வேறு பகுதியிலேயே தங்கியிருந்து தொழிற்சாலை நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்குவதற்கும், அவர்கள் உண்ணும் உணவைப் பிரத்தியேகமாக தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ளவும், பல்வேறு பகுதிகளில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளும் அதை சார்ந்த உணவகங்களும் அந்த நிறுவனத்தின் வாளகத்திலேயே உள்ளது.
இந்த நிலையில் தைவான் நாட்டை சேர்ந்தவர் நி சியா சியாங் (Ni Chia Hsiung) என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மாம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வீட்டில் தங்கி உள்ளார்.
அவர், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள பிரபல செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வழக்கமாக நி சியா சியாங் காலையில் தொழிற்சாலை நிர்வாக பணிக்கு செல்வதும் , மாலை வீடு திரும்பும் போதும் வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து மதியம் 2 மணிக்கு ஸ்டார் சிட்டியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்தபோது 25 சவரன் நகைகள், வைர நகைகள், இந்திய மதிப்பில் ரூ. 1.50 லட்சம் அமெரிக்கன் டாலர் வைத்திருந்த லாக்கர் பெட்டியை எடுத்து சென்றது தெரியவந்தது.
இதையெடுத்து, ஶ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கொள்ளை சம்பவம் குறித்து நி சியா சியாங் புகார் அளித்தார். புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் தடயஅறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், திருடு போன வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், இரண்டு மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று இரண்டு லாக்கர் பெட்டிகளை எடுத்து சென்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றிய போலீஸார் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தற்போது, திருட்டு நடைபெற்றுள்ள வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நகை மற்றும் பணம் திருடு போன நிலையில் தற்போது அதே பகுதியில் திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் தொழிற்சாலை ஊழியர்களின் வீடுகளை குறிவைத்து கொள்ளையடிப்பதை கடந்த சில மாதங்களாக திருடர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர் என்பதும், புகழ்பெற்ற குடியிருப்பு வளாகத்தில் போதிய சிசிடிவிகள் இல்லாததும் காவல்துறைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu