காஞ்சிபுரம் அருகே நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிளஸ் 1 மாணவர்.. தேடும் பணியில் தீயணைப்பு படையினர்..
நீர் நிலையில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன் ராஜேஷ்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எடையார்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் ராஜேஷ் (வயது 16). அதே பகுதியில் செயல்படும் அரசுப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியைச் சேர்ந்த சக நண்பர்களுடன் எடையார்பாக்கம்- குணகரம்பாக்கம் இடையே உள்ள தரை பாலத்தில் செல்லும் மழை நீரை வேடிக்கை சென்றுள்ளார்.
அப்போது, தரைப் பாலத்தை மூழ்கடித்து சீறிப்பாய்ந்து செல்லும் நீரில் எதிர்பாராத விதமாக ராஜேஷ் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவனை மீட்க முயற்சித்தும் முடியாததால் உடனடியாக சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு மாயமான மாணவனை 3 மணி நேரமாக தேடி வருகின்றனர்.
ஆண்டு தோறும் மழைக்காலங்களில் இந்த தரை பாளத்தில் அதிக அளவில் நீர் செல்வதால் மேம்பாலம் அமைத்து தர கிராம மக்கள் பலமுறை அரசுக்கு வலியுறுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதே இது போன்ற உயிரிழப்புகள் தொடர்ந்து நடந்து வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வியாபாரி பலி:
இதேபோல், பெரிய காஞ்சிபுரம் பானக்கார தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). இவர் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் தேங்காய், பழம், பூஜை பொருட்கள், விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மதிய வேளையில் கோயில் நடை மூடிய பின்பு கடையை அடைத்து விட்டு சர்வதீர்த்த குளக்கரை வழியாக சென்று உள்ளார். அப்பொழுது சர்வதீர்த்த குளத்தில் முகம், கை, கால், கழுவுவதற்கு இறங்கி உள்ளார். எதிர்பாராத விதமாக கால் இடறி குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி உள்ளார்.
செந்தில்குமார் குளத்தில் விழுந்ததை தூரத்திலிருந்து பார்த்த நபர்கள் உடனடியாக ஓடிச் சென்று பார்த்த பொழுது நீரில் மூழ்கி விட்டார். இச்சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள் ரப்பர் படகு உதவியுடன் பாதாள கொலுசை போட்டு நீண்ட நேரம் தேடி உயிரிழந்த நிலையில் செந்தில்குமாரின் உடலை மீட்டனர்.
இது குறித்து சிவகாஞ்சி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விரைந்து சென்ற போலீஸார் உயிரிழந்த செந்தில்குமார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர் கால் இடறி குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu