குன்றத்தூர் பகுதி கோயில்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

குன்றத்தூர் பகுதிகளில் பல்வேறு திருக்கோயிலில் திருப்பணிக்கான ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் தா.மோ. அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்தை அலுவலர்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், அருள்மிகு ஆதி திருவாலீசுவரர் திருக்கோயில், அமரம்பேடு அருள்மிகு கரியமாணிக்க பெருமாள் திருக்கோயில், ஒரத்தூர் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், சிறுவாஞ்சூர் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை திருவாலீசுவரர் திருக்கோயில், நாவலூர் அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பர நாதேஸ்வரர் திருக்கோயில், செரப்பணஞ்சேரி அருள்மிகு விமீஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 1000 ஆண்டுகள் கடந்திருக்கின்ற, தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் கடந்த காலங்களில் பராமரிப்பு இல்லாததால் பல்வேறு திருக்கோயில்கள் சீரழிந்து வருகின்ற நிலை உணர்ந்தும், ஊடகங்கள், பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தியை தொடர்ந்தும் முதலைமைச்சர் உத்தரவின்படி இன்று பழமை வாய்ந்த 8 திருக்கோயில்களை ஆய்வு செய்துள்ளோம்.
இந்த திருக்கோயில்களில் இருக்கின்ற குளங்களை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளும், எந்த ஆண்டு திருப்பணிகள் நடந்ததே என்று தெரியாமல் இருந்த திருக்கோயில்களுக்கு முழுமையாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும், திருக்கோயில்களுக்கு சுற்றுச் சுவர் அமைப்பதும், திருக்கோயில் சொத்துக்களை பாதுகாப்பது போன்ற முயற்சிகள் குறித்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இன்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட திருக்கோயில்களில் 4 திருக்கோயில்கள் குடமுழுக்கு பணிகளுக்காக கடந்த ஆண்டே மண்டலக்குழு, மாநில குழு ஒப்புதல் பெறப்பட்டு தற்போது கட்டமைப்பிற்கு உண்டான எஸ்டிமேட்(Estimate) தயாரிக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
வெகு விரைவில் டெண்டர் கோரப்பட்டு திருப்பணிகளை மூன்று மாதக் காலத்திற்குள்ளாக தொடங்கப்பட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே. செல்வப்பெருந்தகை, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மண்டல இணை ஆணையர் திருமதி.ஆர்.வான்மதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu