மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 106 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சோமங்கலம் பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி , உடன் குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், சோமங்கலம் ஊராட்சி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இன்று (10.07.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.68.93 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார்கள்.
மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழில்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை, சமூக நலன் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரங்கள் குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் இங்கு அமைக்கப்பட்டு உள்ள துறை சார்ந்த அரங்குகளில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டங்களின் விவரங்கள் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருப்பின் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து கொள்ளலாம்.
இன்று மக்கள் தொடர்பு திட்டம் முகாமில் 26.06.2024 முதல் 08.07.2024 வரை பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றம், பட்டா திருத்தம், பட்டா நகல், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் திருமண உதவித்தொகை, ஊனமுற்றோர் நான்கு சக்கர வாகனம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் உரிய முறையில் தீர்வு காணப்பட்டது .
அதில் 106 தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.68 லட்சத்து 93 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் உள்ளிட்ட பல்துறை அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu