ரூ. 30 ஆயிரம் லஞ்சம்: காஞ்சிபுரத்தில் அரசு பணிமனை செயற்பொறியாளர் கைது
காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அரசு பணிமனை செயற்பொறியாளர் மோகன்.
காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுகாவேரிபாக்கத்தில் அரசு தானியங்கி பணிமனை செயல்பட்டு வருகிறது. இங்கு காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டத்தில் உள்ள அரசு வாகனங்கள் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வெங்கடேசன் என்பவருக்கு அந்தப் பகுதி அரசு வாகனங்கள் பழுது பார்க்கும் உப உரிமம் அளிக்கப்பட்டு அரசு வாகனங்கள் பழுது பார்க்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அந்த உரிமம் புதுப்பிப்பதற்காக வெங்கடேசன் கடந்த மூன்று முறை மனு அளித்த நிலையில், பணிமனையை ஆய்வு செய்ய உதவி செயற்பொறியாளர் மோகன் சென்றுள்ளார்.
அதன்பின் உரிமம் அளிக்க ரூபாய் 30,000 லஞ்சமாக வெங்கடேசனிடம் கேட்டாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக மாவட்ட கண்காணிப்பாளர் கலைச்செல்வனிடம் இது குறித்த புகார் அளித்தார்.
அவரது ஆலோசனைப்படி, வெங்கடேசன் சிறுகாவேரிபாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று செயற்பொறியாளர் மோகனிடம் பணம் கொடுக்க முயன்ற போது, அதனை அதே அலுவலகத்தில் பணி புரியும் சார்ஜ்மேன் முரளியிடம் அளிக்க கூறியதின் பேரில் அவரிடம் அளித்தார்.
அதனை பெற்றுக் கொண்ட முரளி, அந்த பணத்தை செயற்பொறியாளர் மோகனிடம் அளிக்க சென்றபோது ஆய்வாளர் அண்ணாதுரை, கீதா உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை குழுவினர் முரளி மற்றும் மோகனை கையும் காலமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அவரிடம் இருந்து லஞ்சமாக பெற்ற 30 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது. அரசு தானியங்கி வாகன பழுது மையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இருவரை கைது செய்தது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu