குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் மாதம் ரூ. 15 ஆயிரம் வருமானம் ஈட்டும் களக்காட்டூர் ஊராட்சி!
களக்காட்டூர் ஊராட்சியில் செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்.
தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சிகள் வீடுகள் தோறும் குடிநீர் வழங்கி வந்தாலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தனியார்களிடம் இருந்து வாங்குவது ஒரு வாடிக்கையாகவே உள்ளது. குடிசைவாசிகள் கூட அதையே விரும்பும் நிலை உள்ளது.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நோய்களை உண்டாக்கும் துகள்கள் மற்றும் உயிரினங்களை அகற்றவும், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும், உயிரினங்களுக்கும் சுத்தமான, குடிநீரை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாகவே தற்போது கிராம ஊராட்சிகளில் கூட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலை அதிகமாக உள்ளதால் அந்த தொழிற்சாலைகள் தங்களது சமூகப் பங்களிப்புணியை இதுபோன்று பல்வேறு கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து அவர்களின் பெயரை நிலைக்க வைக்க திட்டத்தினை செய்து வருகின்றனர்.
சுமார் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் இருபது லிட்டர் குடிநீர் ஐந்து ரூபாய் நாணயம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட களக்காட்டூர் கிராம ஊராட்சியில் குளக்கரை அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் பெறப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. களக்காட்டூர், கேஎஸ்பிநகர், நாயுடுவின், வாகிரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு கிராம ஊராட்சியில் குடிநீர் வழங்கப்பட்டாலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை நாள்தோறும் குறைந்த பணம் செலுத்தி பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுவாகவே தற்போது ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தாலும், பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்துவது என்பது ஒருவகையில் சுகாதாரம் என்பதும், அதை ஒரு கௌரவமாகவும் நினைக்கின்றனர்.
இதுகுறித்து கிராம ஊராட்சி தலைவர் நளினி டில்லிபாபு கூறுகையில், களக்காட்டூர் ஊராட்சியில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கி உள்ளதாகவும், கிராம வீதிகளில் பொதுக் குழாய் அமைத்தும் பொது மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
ஊராட்சி செயலர் சேகர் கூறுகையில், மாதந்தோறும் சுமார் 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை இதன் மூலம் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. இது மட்டும் அல்லாமல் அதனை முறையாக பராமரிக்கவும் இப்ப பணம் உதவுவதாகவும் பொது மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இதனை பயன்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu