கழிவு நீர் லாரிகளில் ஜிபிஆர்எஸ் கருவிகள் மூலம் கண்காணிப்பு: கே.என்.நேரு

கழிவு நீர் லாரிகளில் ஜிபிஆர்எஸ் கருவிகள் மூலம் கண்காணிப்பு: கே.என்.நேரு
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த மண்டல ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் தா.மோ. அன்பரசன்.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் செயல் அலுவலர் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாக துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மண்டலளவிலான நிர்வாக துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள நல்லுறவு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆர்த்தி மற்றும் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தலைவர்கள் செயல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு நடைபெற்று வரும் பணிகள் நிலை குறித்தும் புதிய திட்டங்களுக்கான கோரிக்கைகளையும் மண்டல வாரியாக கேட்டறிந்தார்.

இதில் பொது மக்களுக்கு சேவை புரியும் எண்ணத்தில் அவர்களது கோரிக்கையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் குடிநீர் சாலை மேம்பாடு உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும், இதுகுறித்து பிரச்சனைகள் ஏற்படும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைகளை பெற்று செயல்படுத்த வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாக துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகள் முறையாகவும் , வெளிப்படைத்தன்மையாகவும் , நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவு நீர் நீர்நிலைகள் மற்றும் சாலை ஓரங்களில் விடப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில , மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி ஆகிய நிர்வாகங்களில் கீழ் உரிய அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே இதை செயல்படுத்தும் எனவும் இதை கண்காணிக்க வாகனங்களில் ஜி பி ஆர் எஸ் எனும் கருவி பொருத்தப்பட்டால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் , வாகனங்களின் செயல்பாட்டை கண்காணித்து, தவறு நடக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் , தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் , நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர், நிர்வாக இயக்குனர் பொன்னையா, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர் , எஸ்.ஆர்.ராஜா, சி.வி.எம்.பி ஏழிலரசன், ஜி.கருணாநிதி , வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!