கிராம சபை கூட்டத்தில் மோதலா?: வளர்ச்சி பணிகள் பாதிக்கும் அபாயம்.

கிராம சபை கூட்டத்தில் மோதலா?: வளர்ச்சி பணிகள் பாதிக்கும் அபாயம்.
X

பழைய சீவரம் கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டபோது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்களில் கைகலப்பு. பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற கிராம சபை கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் கிராம ஊராட்சிகள் சார்பாக ஆண்டு தோறும் தற்போது 6 கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

குடியரசு தினம், தொழிலாளர் தினம், உள்ளாட்சி தினம் உலக தண்ணீர் தினம் , சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி அன்று அந்தந்த கிராம சபை பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெறுவது வழக்கம்.

இந்த கிராம சபை கூட்டத்தில் உள்ளாட்சித் துறை சார்பில் அறிவுறுத்தப்படும் தீர்மானங்கள் பொது விவாதத்திற்கு வைக்கப்பட்டு அதன் பேரில் கூட்டம் நடைபெறுவதும் அது மட்டும் இல்லாமல் கிராம ஊராட்சி வளர்ச்சிக்கான திட்டமிடுதலும் இதில் நடைபெறும்.

அவ்வகையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் காலை 11 மணிக்கு துவங்கியது. இதில் எப்போதும் இல்லாத அளவிற்கு சில கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் இடையே கைகலப்பு வரை சென்றது. இதை படம் பிடித்த நபர்களுக்கு கொலை மிரட்டலும் விடப்பட்டது. இது மட்டும் இல்லாமல் முதன்முறையாக காவல்துறை பாதுகாப்பும் இந்த கிராம சபை கூட்டத்திற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஊத்துக்காடு கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக அலுவலகம் அமைக்க வேண்டும் எனவும் இதை யாரும் தடுக்க இயலாது எனவும் காட்டமாக பேசியது பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இடையே பெரும் வாக்குவாதமாக மாறியது.

அதேபோல் பழையசீவரம் கிராம ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திலும் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு காவல்துறை அதில் தலையிட்டு சமாதானம் செய்தது.

கிராம சபை கூட்டங்கள் எப்போதும் சில வாக்குவாதங்களுடன் அமைதியாக நடைபெறும் நிலையில் முதன்முறையாக தள்ளுமுள்ளு மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது அதிர்ச்சியை அளிக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!