சாலையோரங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர் விவரங்களை சேகரிக்கும் காஞ்சிபுரம் காவல்துறை..

சாலையோரங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர் விவரங்களை சேகரிக்கும் காஞ்சிபுரம் காவல்துறை..
X

ஆதரவற்றோர் விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீஸார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலையோரங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோரின் விவரங்களை சேகரிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோயில் நகரம், பட்டு நகரம், தொழிற்சாலை நகரம் என பல பெயர்களை பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில நபர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, திருக்கோயிலில் தரிசனம் மேற்கொள்ள ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்கு பின் கோயில் அருகே உள்ள முதியவர்களுக்கு உணவு மற்றும் காசுகளை அளிப்பது வழக்கம்.

மேலும், திருக்கோயில்களில் மதிய நேரங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அன்னதானம் நடைபெறுவதால் அதனை உண்பதற்கு ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் பல தரப்பினரும் வருவதால் திருக்கோயில் சுற்றி முதியவர்கள் எப்போதும் அதிகம் உள்ளனர்.

இந்தநிலையில், பல வயது முதிர்ந்த ஆதரவற்றோர்கள் திருக்கோயில் அருகே படுத்து உறங்கியும் பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே கிடைக்கும் இடங்களில் உறங்கும் நிலையும் உள்ளது. அவர்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள் உணவு அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் ஆதரவற்றோர் எண்ணிக்கை பெருகி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். அவ்வாறு சுற்றித்திரியும் ஆதரவற்றோரிடம் உரிய விசாரணை மேற்கொண்டு சாலையில் விடும் உறவினர்கள் மீது நடவடிக்கையை எடுக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி என தொடர் கன மழையினால் ஆதரவற்றோர் பலர் அவதிக்குள்ளாவதை அனைவரும் கண்டு மன வேதனை அடைந்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஒரு முன் முயற்சியாக திருக்கோயில்களின் முன்பாக அமர்ந்து யாசகம் பெறும் ஆதரவற்றோர்களை அழைத்து சென்று அவர்களின் விபரங்களை பெற்ற பின் காப்பகத்தில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளார்.

அந்த வகையில், முதலாவதாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் காமாட்சி அம்மன் கோயில் அருகே அமர்ந்திருந்த ஆதரவற்றோர்களை அண்ணா அரங்கத்தில் அமர வைத்து அவர்களது விவரங்களை காவல்துறையினர் உதவியுடன் சேகரித்தார்.

மேலும், அவர்களது நிலைக்கு என்ன காரணம் எனவும் அவர்களுக்கு என்ன தேவை என்பதையும் காவல்துறையினர் கேட்டறிந்தனர். இதில் பலர் தங்களை கவனிக்க ஆள் இல்லை என்பதால் இது போன்ற இடங்களில் அமர்ந்து பக்தர்கள், தொண்டு நிறுவனங்கள் தரும் உணவையும் உண்டு வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

காவல்துறையினர் அரசு காப்பகங்களில் சேர்ப்பதாக தெரிவித்த போதும், பலர் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆதரவற்றோரிடம் பெறப்பட்ட விவரங்களைக் கொண்டு அவர்களது உறவினர்களை விசாரித்து இதுபோன்ற செயலை தவிர்க்க வேண்டும் என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவல்துறையினர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை முறையாக செயல்படுத்தி, ஆதரவற்றோருக்கு தேவையான நல்வழியை காட்ட வேண்டும் என்றும் காவல்துறையால் மட்டுமே இந்த செயலை எளிதில் நிறைவேற்ற முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது