காஞ்சிபுரத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா.. விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்…

காஞ்சிபுரத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா.. விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்…
X

மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய மாணவ மாணவியர்கள்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மக்கள் கல்லூரி மையத்தில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி முன்னிலையில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் நடனமாடினப், குறிப்பாக, சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் கூறியதை உள்வாங்கி தங்களுக்கே உரிய பாணியில் சுற்றுச்சூழலால் ஏற்படும் நன்மை தீமைகளை நாடகமாகவும் நடித்துக் காட்டினர். அந்த நிகழ்ச்சிக்கு அரங்கமே அதிரும் அளவிற்கு கைத்தட்டல் பெற்று வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து, நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ஆகியோர் வழங்கினர். அப்போது, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சக்கர நாற்காலி, செல்போன், ELBOW ஊன்றுக்கட்டைகள், காதுக்குபின் அணியும் காதொலிக்கருவி, AUXILLIARY CRUTCHES, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் போன்ற உதவி உபகரணங்கள் 25 பயனாளிகளுக்கு ரூ. 3,93,300 மதிப்பில் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பல்வேறு குழுவினர் நடனமாடிய போது அரங்கத்தில் இருந்த அனைத்து மாணவ , மாணவிகளும் நடனமாடி மகிழ்ந்தனர். விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் செய்த அறிவியல் பொருட்கள் கண்காட்சியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது

நிகழ்ச்சியில், முடநீக்கவியல் வல்லுநர் ஆனந்தன், அனைத்து சிறப்பு பள்ளியின் தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மாநில, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story