காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டாவை ஒரு பெண்ணிற்கு ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட் கிழமை நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.3.92லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மா.ஆர்த்தி வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடமிருந்து 240 மனுக்கள் வரப் பெற்று அவை துறை வாரியாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து விரைவில் தீர்வு காணுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் காஞ்சிபுரம் மாவட்டம் சித்தேரிமேடு கிராமத்தை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு ரூ.3.92 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களையும் ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் கொடிநாள் நிதி வசூலாக வசூலிக்கப்பட்டிருந்த தொகை ரூ.5.10லட்சத்துக்கான காசோலையை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேதபுரி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)புண்ணியகோட்டி,சமூகப்பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி,மாவட்ட ஆதிதிராவிடநல அலுவலர் கு.பிரகாஷ்வேல் ஆகியோர் உட்பட பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதேபோல் அசாம் மாநிலம்,கவுகாத்தியில் அத்லெடிக்ஸ் ஃபெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் 37வது தேசிய ஜூனியர் தடகள சேம்பியன்ஷிப் போட்டி கடந்த 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்ற இந்த தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 1000மீட்டருக்கான தொடர் ஓட்ட போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த சங்கரா பல்கலைக்கழகத்தில் பி.காம். முதலாம் ஆண்டு பயிலும் மாணவன் கார்த்திகேயன் வெள்ளி பதக்கம் வென்றார்.
வெள்ளி பதக்கம் வென்ற கார்த்திகேயனை இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் மற்றும் பயிற்சியாளர் தாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதேபோன்று காவாந்தண்டலம் ஏரிக்கு நீர் வரும் பணியை மேற்கொள்ளாத நிர்வாகத்தை கண்டித்து வரும் ஐந்தாம் தேதி ஏரி அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் புருஷோத்தமன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவரை அவதூறாக பேசி வருவதாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
இந்த கூட்டம் முடிந்த பின் அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை உரிய காலத்தில் எடுக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu