காஞ்சிபுரம் பட்டுச்சேலையில் திருப்பதி பெருமாளின் 504 முகங்கள் வடிவமைப்பு

பெருமாளின் வடிவங்களை கணினியில் வரையும் தம்பதியர் குமாரவேல்- கலையரசி.
பட்டுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் நகரில் விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத்தெருவில் வசித்து வருபவர் குமாரவேலு. இவரது மனைவி கலையரசி.
இவர்களிருவரும் காஞ்சிபுரம் பட்டுச்சேலையில் வாடிக்கையாளர் விரும்பும் தெய்வங்களின் உருவங்களை வடிவமைத்து தரும் தொழிலை செய்து வருகின்றனர்.
இவர்களிடம் சென்னையை சேர்ந்த வெங்கோபாஷா என்பவர் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளுக்கு பிரமோற்சவத்தன்று அணிவிப்பதற்காக அவரது முகங்களை சேலையின் உடலில் வடிவமைத்து தருமாறும்,சேலை முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமியின் தோற்றத்தை வடிவமைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அதன்படி இத்தம்பதியர் விரதமிருந்து கடந்த 9 நாட்களாக திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளின் முகங்கள் 504 ஐ உடலிலும்,ரங்கநாதரை சேலை முந்தானையிலும் வடிவமைத்து வருகின்றனர்.
சேலை பாடரில் இரு யானைகள் தும்பிக்கையை தூக்கி ஆசீர்வதிப்பது போன்றும் பட்டுச்சேலை காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அரக்கு நிற பட்டுச்சேலையில் தயாராகும் இச்சேலையானது வரும் புரட்டாசி மாத பிரமோற்சவத்தன்று திருப்பதி பெருமாளுக்கு அணிவிக்கப்படவுள்ளது.
இது குறித்து குமாரவேல் கூறுகையில், நானும் எனது மனைவியும் இணைந்து விரதமிருந்து கடந்த 9 நாட்களாக இப்பட்டுச் சேலையை தயாரித்து வருகிறோம்.எங்களோடு மேலும் 4 பேர் இணைந்து இரவு பகலாக இச்சேலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம்.
முதலில் கணினியில் தேவையான உருவத்தைக் கொண்டு வந்து பின்னர் சேலையில் வடிவமைப்போம்.வரும் திங்கள்கிழமை சேலை முழுவதுமாக தயாராகி உரியவரிடம் ஒப்படைக்க இருக்கிறோம்.
பின்னர் இச்சேலை திருப்பதி பெருமாளுக்கு அணிவிக்கப்படவுள்ளது. பட்டுச்சேலைகளில் சாதாரண வடிவங்களை விட ஏதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வமே இதுபோன்ற சேலை வடிவமைப்புக்கு காரணம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu