தேசிய ஹேண்ட் பால் போட்டிக்கு காஞ்சிபுரம் தொழிலாளியின் மகள் தேர்வு…
மாணவி ரோஷினி.
இந்தியா முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நகரில் நடைபெற்று வருகிறது.
கடந்த தலைமுறை காலங்களில் சில பாரம்பரிய விளையாட்டுகள் மட்டுமே இருந்தது. தற்போது பல்வேறு புதிய விளையாட்டுகளும், அறிமுகப்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரி மாணவர்களால் அதிக ஆர்வம் கொண்டு விளையாடப்பட்டு வருகிறது.
விளையாட்டில் சாதனை புரிந்தவர்களுக்கு கல்வி கற்க சிறப்பு ஒதுக்கீடு உள்ளதால் விளையாட்டில் தற்போது மாணவர்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டு வருகிறது. மேலும், அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளூர் முதல் மாநில தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற்று பரிசு பெறும் அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது மிகவும் பள்ளி மாணவர்களிடையே பிரபலமாகி வருகிறது எறிபந்தாட்டம் என்கிற ஹேண்ட் பால் விளையாட்டு. இதில், ஒரு அணிக்கு 7 பேர் என பந்தை கைகளால் கையாண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். கால்பந்தாட்டம் போன்று பந்தை ஒரு இலக்கு கம்பத்துக்குள் இடவேண்டும், ஆனால் கால்களால் அல்லாமல் கைகளால் பந்தை கையாடி இலக்கு கம்பத்துக்குள் போட வேண்டும்.
ஒருவர் பந்தை 3 வினாடிகளுக்கு மேல் கையில் வைத்திருக்க முடியாது. இந்தப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் வட்டார அளவில் வென்று, மாவட்ட அளவில் விளையாடி, தற்போது பீகார் மாநிலத்தில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
37 ஆவது சப் ஜூனியர் மகளிர் தேசிய ஹேண்ட்பால் போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொள்ளும் மாணவிகளை தேர்வு போட்டி நடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், காஞ்சிபுரம் அருகேயுள்ள நசரத்பேட்டை அரசினர் உயர்நிலை பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி ரோஷினி பங்கேற்று தேர்வாகி உள்ளார்.
இந்த தமிழகம் குழுவில் மொத்தம் 16 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக அணிக்காக தேர்வாகிய பள்ளி மாணவி ரோஷினியின் தந்தை பாண்டியன் பெயிண்டர் தொழிலை மேற்கொண்டு வருகிறார். தாய் ஜகதாம்பாள் இல்லத்தரசி
சென்னையில் நடைபெற்ற தேர்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. நசரத்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வானவில் மன்ற துவக்க விழாவிற்கு வருகை புரிந்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மன்றத்தை துவக்கி வைத்து பள்ளி மாணவி தேர்வு குறித்து உடற்கல்வி ஆசிரியர் மகேந்திரன் அவரிடம் தெரிவித்தார். உடனே, அந்த மாணவியை அழைத்து மாணவி ரோஷினிக்கு ஊக்கத் தொகையாக 5000 ரூபாயை எழிலரசன் எம்எல்ஏ வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu