காஞ்சிபுரம் மாநகராட்சியில் 250 இடங்களில் நாளை பகுதி சபா கூட்டங்கள்: மேயர் மகாலட்சுமி.

காஞ்சிபுரம் மாநகராட்சியில்  250 இடங்களில் நாளை பகுதி சபா கூட்டங்கள்: மேயர் மகாலட்சுமி.
X

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்ற மாமன்ற அவசர கூட்டம் 

 மாமன்ற அவசரக் கூட்டம்

காஞ்சிபுரம் 51 வார்டுகளிலும் மொத்தமாக 250 இடங்களில் பகுதி சபா கூட்டங்கள் நடத்தப்பட இருப்பதாக இன்று நடைபெற்ற அவசர மாமன்ற கூட்டத்தில் மேயர் தெரிவித்தார்.

நாளை தமிழகமெங்கும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் முறையாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் நகர பகுதிசபா கூட்டங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ஆர்.குமரகுருபரன், ஆணையாளர் ஜி.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு தலைமை வகித்து மேயர் பேசியது..

தமிழக அரசு கேட்டுக்கொண்டபடி மாநகராட்சி பகுதிகளில் பகுதி சபாக்கள் நடைபெறவுள்ளது. கிராமங்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவது போல மாநகராட்சியில் ஒவ்வொரு பகுதிக்கும் கூட்டங்கள் நடத்தப்படுவதால் இது பகுதி சபா எனப்படுகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டையும் மக்கள் தொகையின் அடிப்படையில் 4 அல்லது 5 ஏரியாக்களாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் ஒரு சபா தலைவரையும் நியமித்து செவ்வாய்க்கிழமை பகுதி சபாக்கள் நடத்தப்படும்.

இக்கூட்டத்தில் அந்தந்த வார்டில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள்,அரசு மாநகராட்சி மூலமாக செயல்படுத்தி வரும் திட்டங்கள்,அரசின் பிற துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், மாநகராட்சிக்கு வரி செலுத்தியது மற்றும் செலுத்தாதவர்கள் பட்டியல் வாசித்தல், அந்தந்த பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து வளர்ச்சிக்கு திட்டமிடுதல் ஆகிய 5 பொருட்களில் பகுதி சபாக்களில் கலந்துரையாடி தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இந்த பகுதி சபாக்கள் அனைத்தும் சுழற்சி முறையில் கூடி முடிவெடுத்து அதனை மாமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இக்குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை கூடி முடிவுகளை எடுக்கும் எனவும் மேயர் எம்.மகாலட்சுமி பேசினார்.

கூட்டத்தில் மாநகர் மன்ற மண்டலத் தலைவர்கள், உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இது போன்ற கூட்டங்கள் நகர வளர்ச்சிக்கும், நம் பகுதியில் ஏற்படும் குறைகளை மாமன்ற உறுப்பினர் முன்னிலையில் எடுத்துரைத்து, அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை கூட்டம் விவாதித்து, அதனை தீர்மானமாக மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சமர்ப்பிக்கும் வேளையில், காலநிலை கருதி இதனை திட்டமாக்கி செயல்படுத்தவும் அதற்கான நிதியை ஒதுக்கவும் மாநகராட்சிக்கு பேருதவியாக கூட்டங்கள் அமையும்.

இதனால் இதுபோன்ற கூட்டங்களில் அந்தந்த வார்டு பகுதி மக்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் அடிப்படை தேவைகளையும் , வார்டு வளர்ச்சிக்கும் தேவையான நல் கருத்துக்களையும் தெரிவிக்கும் நிலையில் எந்தவித தடையின்றி அனைத்தும் நிறைவேறி ஒவ்வொரு வார்டும் போட்டி போட்டுக் கொண்டு மாதிரி வார்டாக திகழ, இதுபோன்ற கூட்டங்கள் திகழும் என்பதில் ஐயமில்லை.

புதியதாக பகுதி சபா கூட்டங்கள் நடைபெறுவதால் ஓரிரு கூட்டங்கள் சற்று தொய்வு மற்றும் ஒருங்கிணைப்பில் குளறுபடி ஏற்பட்டாலும், இதனை சிறப்பாக மாமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி தங்கள் பெயரை வெளி கொணர இது பெரும் வாய்ப்பாக அவர்களுக்கு அமையும் என்பதை ஐயமில்லை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!