டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை 2 மணி நேரம் குறைக்க அரசு பரிசீலனை!!
பைல் படம்
டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை 2 மணி நேரம் குறைக்க அரசு பரிசீலனை!!
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரையிலும் 10 மணி நேரம் இயங்கி வருகிறது. குடியிருப்பு பகுதிகள், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ள இடங்களுக்கு அருகில் இயங்கி வந்த 500 டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு அண்மையில் மூடி விட்டது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் மத்தியில் வரவேற்றுள்ளனர். இருப்பினும், டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என பல அரசியல் கட்சிகளும், பொதுமக்கள் தரப்பிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஏற்கெனவே, மதுபாட்டிலுக்கு ரூ.10 வீதம் கூடுதலாக பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக சு.முத்துசாமி பொறுப்பேற்ற பிறகு மதுக்கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது சற்றே குறைந்துள்ளது.
இந்நிலையில், மதுக்கடைகளின் நேரத்தை குறைப்பது குறித்தும் டாஸ்மாக் உயரதிகாரிகள் மட்டத்தில் விவாதிக் கப்பட்டது. அதன்படி, மதியம் 2 மணிக்கு டாஸ்மாக் கடையை திறந்து இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடையை திறப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக டாஸ்மாக் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பெயர் கூற விரும்பாத டாஸ்மாக் உயரதிகாரி ஒருவர் கூறியது:
டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளால் தமிழக அரசு மீது பரவலாகவே குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்த அதிருப்தி அதிகமாகவே உள்ளது. இது எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக தமிழக அரசு தரப்பில் கருதப்படுகிறது.
ஏற்கெனவே டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடியாக பல சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டாஸ்மாக் கடைகள் இயங்கும் 10 மணி நேரத்தை 8 மணி நேரமாக குறைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
அதன்படி மதியம் 2 மணிக்கு டாஸ்மாக் கடையை திறந்து இரவு 10 மணிக்கு கடையை அடைத்து விடுவது என திட்டமிட்டுள்ளோம்.இந்த நேரக்குறைப்பு வரும் டிசம்பரில் இருந்து அமலாக்க திட்டமிட்டு, இதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்கள் குறித்து தீவிரமாக விவாதித்து வருகிறோம் என்றனர்.
பார் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம்: டாஸ்மாக் கடைகளின் நேரத்தை 2 மணிநேரம் அரசு குறைப்பதால் பார்களில் கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் பார் உரிமையாளர்களுக்கு தான் கொண்டாட்டம் என்கின்றனர் மதுப்பிரியர்கள்.
ஏற்கெனவே, இரவு 10 மணிக்கு மேல் பல பார்களில் கூடுதல் விலைக்கு சரக்கு தாராளமாக விற்கப்படுகிறது. இரவு 10 மணி முதல் அடுத்த நாள் பகல் 12 மணிக்கு கடை திறக்கும் வரையிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்கிறார்கள். இனி கூடுதலாக 2 மணி நேரம் அதாவது பகல் 2 மணி வரையிலும் மது விற்பனையில் ஈடுபடுவதன் மூலம் பார் உரிமையாளர்கள் தான் கூடுதலாக கல்லா கட்டுவார்கள். இதற்கு மாற்று வழியையும் அரசு யோசிக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu