உள்ளாட்சி கவுன்சிலர் முதல் கைது வரை...யார் இந்த அமைச்சர் செந்தில்பாலாஜி
பைல் படம்
கடந்த 1996 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வார்டு கவுன்சிலராக முதல் முதலாக மக்கள் பிரதிநிதியானார்.
கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர் வே. செந்தில்குமார் என்னும் செந்தில் பாலாஜி. எண் கணிதம், ராசிபலன்களின் மீது நம்பிக்கை கொண்ட அவர் தனது பெயரை செந்தில் பாலாஜி என்று மாற்றிக்கொண்டார். தொடக்கக் கல்வியினை ராமேஸ்வரப்பட்டியிலும், மேல்நிலை கல்வியை கரூரில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார்.
அதன் பின்னர் கரூர் அரசுக் கலைக் கல்லூரியில் இளநிலை படித்தார். அரசியல் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக 1995ம் ஆண்டு கல்லூரி படிப்பை பாதியில் விட்டு விட்டு மதிமுகவில் இணைந்தார். சிறிது காலத்திலேயே மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். பின்னர் 1996ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வார்டு கவுன்சிலராக முதல் முதலாக மக்கள் பிரதிநிதியானார்.
அதன் பிறகு செந்தில்பாலாஜி, 2006ம் ஆண்டு கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். துடிப்பாக செயல்பட்டதன் காரணமாக கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், கரூர் மாவட்ட செயலாளர் என அடுத்தடுத்த பொறுப்புகளை ஜெயலலிதா அவருக்கு வழங்கினார்.
திமுக ஆட்சிக்கு எதிராக மணல் கொள்ளை உள்ளிட்ட விவகாரங்களில் துணிச்சலுடன் செயல்பட்டதால் , ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்கள் பட்டியலில் செந்தில் பாலாஜி இடம் பெற்றார்.
இதனையடுத்து 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவரை போக்குவரத்து துறை அமைச்சராக ஜெயலலிதா நியமித்தார். 2015 ம் ஆண்டு முறைகேடாக பணம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில், அவரது அமைச்சர் பதவி, கரூர் மாவட்ட செயலாளர் பதவி ஆகியவற்றை ஜெயலலிதா பறித்தார். 2016ம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அரவக்குறிச்சி தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இரு அணிகளாக அதிமுக பிரிந்து சட்ட போராட்டம் நடத்தி வந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பட்டியலில் செந்தில் பாலாஜியும் தகுதி நீக்கம் செய்யபட்டார்.
டிடிவி தினகரன் தொடங்கிய அமமுகவில் கரூர் மாவட்ட செயலாளராகவும், அமமுக மாநில அமைப்பு செயலாளராகவும் செயல்பட்ட செந்தில்பாலாஜி , பின்னர் திமுகவில் 2019ம் ஆண்டு இணைந்தார். நாடாளுமன்ற தேர்தலோடு நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 2021ம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில் மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். செந்தில் பாலாஜிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சார துறை ஆகியவை வழங்கப்பட்டது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான தீவிர அரசியலில் செந்தில் பாலாஜி ஈடுபட்டு வந்த நிலையில் , 2015 ஆம் ஆண்டு அதிமுக அமைச்சராக போக்குவரத்து துறையில் இருந்தபோது நடைபெற்ற முறைகேடு தொடர்பாக தற்பொழுது அமலாக்க துறையினர் தற்போது அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அரசியல் கட்சியினரிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu