ரயிலில் பெண் பயணிகளின் பெட்டியை நடுப்பகுதிக்கு மாற்ற முடிவு
பைல் படம்
மின்சார ரெயில்கள் மற்றும் குறுகிய தூரத்துக்கு இயக்கப்படும் ‘மெமு’ வகை ரயில்களில் பெண்களுக்கான பெட்டிகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும், சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடத்திலும் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். நெரிசல் மிகு நேரங்களில் திருட்டு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரீத்தி என்ற பெண் இந்திரா நகர் ரயில் நிலையத்தில் இறங்கும் போது நடைமேடையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் பிரீத்தியின் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடினர். இச்சம்பவத்தில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சிகிசை பெற்று வந்த பிரீத்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, தாம்பரம், ஆவடி வழித்தடங்களில் உள்ள மின்சார ரயில் நிலையங்களிலும் திருட்டு சம்பவங்களும், பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு மேம்பாடு குறித்து சமீபத்தில், ரெயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், ரயில்வே கோட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையின் மண்டல பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாம்பரம், ஆவடி, வேளச்சேரி ரயில் பணிமனை மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், புறநகர் மின்சார ரயில்களில் பெண்கள் மீதான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. ரயில்வே பாதுகாப்பு படை பிரிவில் போதிய ஆட்கள் உடனடியாக நியமிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில், பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு மேம்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். எனவே, மின்சார ரயில்கள் மற்றும் குறுகிய தூரத்துக்கு இயக்கப்படும் 'மெமு' வகை ரயில்களில் பெண்களுக்கான பெட்டிகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பெண்களுக்கான பெட்டிகள் ரயில்களின் நடுப்பகுதியில் ஒரே பெட்டியாக ஒதுக்கீடு செய்தால் ரயில்வே பாதுகாப்பு பணிக்கு வசதியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றார் போல், ரயில்களின் பெட்டிகளி லும், ரயில் நிலையங்களிலும் உரிய மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu