பெண் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபர்கள் கைது: 149.50 பவுன் நகைகள் மீட்பு

பெண் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபர்கள் கைது: 149.50 பவுன் நகைகள் மீட்பு
X

கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களையும், மீட்கப்பட்ட நகைகளையும் படத்தில் காணலாம்.

ஈரோட்டில் பெண் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த இரண்டு வாலிபர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 149.50 பவுன் நகை மீட்டனர்.

ஈரோட்டில் பெண் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த இரண்டு வாலிபர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 149.50 பவுன் நகை மீட்டனர்.

ஈரோடு சம்பத்நகர் அருகே உள்ள சஞ்சய் நகர் ராணி வீதியை சேர்ந்த பிரபாத் மனைவி ராணி சுப்ரியா (வயது 42). ஹோமியோபதி டாக்டர். இவரது தந்தை பழனிச்சாமி. பல் டாக்டர். இவர்கள் வீட்டிற்குள் கடந்த மாதம் 30ம் தேதி இரவு புகுந்த ஆசாமிகள் 219 பவுன் நகைகள் மற்றும் 55 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த பழங்குற்றவாளிகள் இக்கொள்ளையில் ஈடுபட்டதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இந்தநிலையில், கரூர் பேருந்து நிலையம் பகுதியில் கொள்ளையர்கள் நடமாட்டம் இருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன்பேரில் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது, சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், சென்னை ஆவடி சுரக்கபாளையம் நந்தனம் மேட்டூர் குமரன் வீதியை சேர்ந்த அகில்குமார் என்கிற வெள்ளை (வயது 22), அம்பத்தூர் தெற்குவீதியை சேர்ந்த சஞ்சய் என்கிற தனசேகர் (வயது 19) ஆகியோர் என்பதும், இவர்கள் 2 பேரும் ராணிசுப்ரியாவின் வீட்டில் நகையை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அகில்குமார், சஞ்சய் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 149.50 பவுன் நகை மீட்டனர். கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கைதான அகில்குமார் மீது சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 20 குற்ற வழக்குகளும், சஞ்சய் மீது 15 குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், கொள்ளை நடந்த 12 நாளில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!