பவானி அருகே மதுக்கடையை அகற்ற கோரி பெண்கள் சாலை மறியல்

பவானி அருகே மதுக்கடையை அகற்ற கோரி பெண்கள் சாலை மறியல்
X

பவானி-அந்தியூர் சாலையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது எடுத்த படம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே மதுக்கடையை அகற்ற கோரி பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் பவானி-அந்தியூர் சாலையில் காடையாம்பட்டி அருகே திருவள்ளுவர் நகரில் கூலி தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். மேலும் இதே பகுதியில் அரசு மாணவர்கள் விடுதி மற்றும் கோவில் ஆகியவையும் உள்ளது. திருவள்ளுவர் நகரை சேர்ந்த பெண்கள் பல்வேறு ஊர்களில் வேலைக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் வீட்டுக்கு திரும்புவார்கள். இந்த நிலையில் பவானி- அந்தியூர் மெயின் சாலையில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையில் குடிமகன்கள் சிலர் மது பாட்டில்களை வாங்கி கொண்டு திருவள்ளுவர் நகர் பகுதியில் பெண்கள் செல்லும் சாலையில் அமர்ந்து மது குடித்து வருகின்றனர்.

மேலும் குடிபோதையில் அந்த வழியாக செல்லும் பெண்களையும் அவர்கள் மிரட்டி வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும் பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் நேற்று இரவும் குடிமகன்கள் குடித்துவிட்டு கலாட்டா செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து இரவு 9 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது பற்றி தெரிய வந்ததும் பவானி டி.எஸ்.பி. கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும் பெண்களை மது குடிப்பவர்கள் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்றனர்.இதையடுத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ai and future cities