அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
வரட்டுப்பள்ளம் அணையின் மதகை திருகி தண்ணீரை திறந்து வைத்த அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம்.
Water Released From Dam
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு இன்று முதல் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்து உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 33.48 அடி ஆகும். இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் மாசி மாதம் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். இந்நிலையில் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) இன்று முதல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு மதகை திருகி தண்ணீரை திறந்து விட்டார். அப்போது, மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து சென்ற தண்ணீர் மீது பூக்களைத் தூவி வரவேற்றனர்.
Water Released From Dam
பின்னர், இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் கூறுகையில், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 924 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த தண்ணீரானது பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, எள் போன்ற பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்ய பயன் உள்ளதாக இருக்கும். இன்று முதல் வருகிற 17-6-2024 வரை 100 நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது. மொத்தம் 96.940 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரவி, உதவிப் பொறியாளர் கிருபாகரன், சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி, பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் நாகராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu