அரச்சலூர்-சென்னிமலை இடையே கீழ்பவானி வாய்க்கால் மதகில் நீர் கசிவு
பொதுப்பணித்துறை பணியாளர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனர்.
கீழ்பவானி பிரதான வாய்க்கால் அறச்சலூரில் இருந்து 2-ஆக பிரிகிறது. அதில் ஒரு பிரிவு சென்னசமுத்திரம் பகுதியையும், மற்றொரு பிரிவு சென்னிமலை வழியாக சென்று திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே உள்ள மங்களப்பட்டியை அடைகிறது.பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அரச்சலூர் - சென்னிமலை இடையே ஊதங்காட்டுப்புதூர் என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலின் தலைப்பு மதகு பகுதியில் திடீரென நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெயச்சந்திரன் (சென்னிமலை), சபரிநாதன் (காங்கேயம்) ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீர் கசிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.
பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் பொதுப்பணித்துறை பணியாளர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனர். பொதுப்பணித்துறையினர் விரைந்து செயல்பட்டதால் உடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu