ஈரோடு மேற்கு, கிழக்கு சட்டமன்றத் தொகுதிகளில் குறைந்த வாக்குப்பதிவு
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் தற்போது நடைபெற்ற தேர்தலில் ஈரோடு மேற்கு, கிழக்கு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கயம், தாராபுரம், குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில் ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்றத் தொகுதிகள் மற்ற தொகுதிகளை காட்டிலும் தேர்தல்களில் எப்போதும் குறைந்த அளவே வாக்கு பதிவாகி வருகிறது.
இதையடுத்து நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதம் மற்ற சட்டமன்றத் தொகுதிகளுக்கு இணையாக உயர்த்த வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது தற்போதைய வாக்குப்பதிவு நிலவரத்தில் தெரியவந்துள்ளது.
இந்த தேர்தலில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள குமாரபாளையம், மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 70 சதவீத வாக்குப்பதிவு கடந்துவிட்ட நிலையில் ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தொகுதியில் மட்டும் 70 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 66.05 சதவீதமும், ஈரோடு மேற்கு தொகுதியில் 65.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியானது 3.17 சதவீதம் குறைந்துள்ளது. இதே போல் ஈரோடு கிழக்கு தொகுதியில் 1.33 வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.
தேர்தல் நாளான நேற்று முன்தினம் ஈரோடு பகுதியில் வெயிலின் தாக்கம் 109 டிகிரியாக இருந்ததால், பொதுமக்கள் வெளியே வராமல் தவிர்த்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் வெயிலின் தாக்கம் என்று கூறினாலும் மக்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu