ஈரோடு மாநகராட்சியில் தினமும் 1.30 லட்சம் வீடுகளைக் கண்காணிக்கும் தன்னார்வலர்கள்!
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த போதும், ஈரோடு மாவட்டத்தில் பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்தது. குறிப்பாக, மாநகராட்சி பகுதிகளிலும் அதிக பாதிப்பு இருந்ததால், மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, தினசரி கொரோனா பரிசோதனைகள், 4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீடுவீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது. இதனால் மாநகரட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுகிறது.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. குறிப்பாக மாநகராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 1.30 லட்சம் வீடுகளை தினந்தோறும் கண்காணிக்கப்படுகிறது.
இதில் காய்ச்சல் சளி போன்ற அறிகுறி உள்ளவர்களை கண்டறியப்பட்டு உடனடியாக வீடுகளுக்கு நேரில் சென்று கொரோனா பரிசோதனை செய்வதால், தொற்று மேலும் பரவமால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு கிடைக்கிறது. இதன் காரணமாக தற்போது கொரோனா பெருமளவு குறைந்திருப்பது தெரிகிறது. இதேநிலை நீடித்தால் விரைவில் மாநகராட்சி பகுதிகள் முற்றிலுமாக கொரோனாவில் இருந்து விடுபடும். இவ்வாறு அவர் தெரிவித்தார் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu