ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிப்பு
வி.சி.சந்திரகுமார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்தியா கூட்டணி சார்பில் திமுக போட்டியிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நேற்று (ஜன.10) அறிவித்தது. இதையடுத்து திமுக வேட்பாளர் யார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் இன்று (ஜன.11) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே 2011-2016 வரை ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். தற்போது திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியில் உள்ளார்.
இவரது தந்தை பெயர் சொக்கலிங்க முதலியார், தாயார் சம்பூரணம் இருவரும் உயிருடன் இல்லை. சொந்த ஊர் ஈரோடு. மனைவி பெயர் அமுதா. இல்லத்தரசி. மகள் ருசிதா ஸ்ரீ. பல் மருத்துவர். மகன் மெகர்வின் ஸ்ரீ எல்எல்பி (இறுதி ஆண்டு). தொழில் ஜவுளி மொத்த வியாபாரம்.
இவர், 1987ல் திமுக வார்டு பிரதிநிதி. விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர். தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர். 2011ல் பிரிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் தேமுதிக எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். பின்னர், 2016ல் தென்னரசு அதிமுகவிடம் தோல்வி அடைந்து, 2016 முதல் திமுக கொள்கை பரப்பு அணி மாநில இணை செயலாளர் இருந்து வருகிறார்.
2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பகுதி பொறுப்பாளராகவும், 2019 பாராளுமன்ற தேர்தல் சேலம் தொகுதி பொறுப்பாளராகவும், 2021 சட்டமன்ற தேர்தல் குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளராகவும், 2023 பாராளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் இருந்துள்ளார்.
அரவக்குறிச்சி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் முழு நேர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். தமிழகம் முழுவதும் திமுக அறிவித்த அனைத்து பொதுக் கூட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.
பெருந்துறை சரளையில் நடைபெற்ற மண்டல மாநாட்டு பணிகளை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சருமான சு.முத்துச்சாமியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும், இவர் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக நியமிக்கபட்டு உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu