ஈரோடு மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், 2,532 நோயாளிகள் குணமடைந்தனர்!

ஈரோடு மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், கடந்த 11 மாதங்களில் காசநோயில் இருந்து 2 ஆயிரத்து 532 பேர் குணமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 15 வட்டார காசநோய் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர, பொதுமக்களுக்கு இரண்டு நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி வாகனங்கள் மூலம் நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், காசநோய் கண்டறியும் முகாம்கள் மூலமாக என்ஏஏடி சளி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு, முகாம்களின் மூலமாக பொது மக்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கமானது புதிய காசநோய் தொற்று உள்ளவர்கள் கண்டுபிடிப்பை தீவிரப்படுத்தி முனைப்பை ஏற்படுத்துவது, காசநோயினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைப்பது மற்றும் புதிய காசநோயாளிகள் உருவாகுவதை தடுப்பது ஆகும்.
காசநோய் ஒரு உயிர் கொல்லி நோய். இது காற்றின் மூலம் பரவும் சமுதாய வியாதியாகும். காசநோய்க்கான அறிகுறிகள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேற்ப்பட்ட சளியுடன் கூடிய இருமல், மாலை நேரக்காய்ச்சல், இரவில் வியர்த்தல், பசியின்மை, உடல் எடை குறைவு, சளியுடன் கூடிய இரத்தம், நெஞ்சு வலி போன்றவைகள் ஆகும்.
காசநோயாளிகளுடன் வசிப்பவர்கள் மற்றும் சமூகத் தொடர்பில் இருப்பவர்கள், கட்டுப்படாத சர்க்கரை நோய் உள்ளவர்கள், பல்வேறு உடல் பிரச்சனைகளால் உடல் மெலிந்து பலவீனமானவர்கள் காசநோய்க்கான பரிசோதனைகளை மேற்க்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
மேலும், காசநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் காசநோய்க்கான சிகிச்சை பெறும் ஆறு மாத காலத்திற்கு மாதந்தோறும் தமிழ்நாடு அரசின் மூலமாக ரூபாய் 1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மேலும், நலிவடைந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக ஊட்டச்சத்து பெட்டகங்கள் கொடையாக பெற்று வழங்கப்படுகிறது. இதன் மூலமாக காசநோயினால் ஏற்படும் இறப்பு விகிதம் பெருமளவில் குறைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை 91,824 நபர்களுக்கு சளி பரிசோதனையும், 6969 பேர்கள் நபர்களுக்கு நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனையும் (X-ray) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 3,257 நபர்களுக்கு காசநோய் கண்டறியப்பட்டு 2,911 நோயாளிகள் சிகிச்சைக்கு பதிவு செய்து, 2,532 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் Nikshay Shivir - காசநோய் இல்லா ஈரோடு மாவட்டம் உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதியன்று விழிப்புணர்வு முகாம் துவங்கப்பட்டு, கடந்த 17ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற்றது. இம்முகாமில் 48,466 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் 336 நபர்களுக்கு காசநோய் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று ஈரோடு மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu