கோபி அருகே சொத்து தகராறில் மின்வாரிய ஊழியருக்கு கத்திக்குத்து: உறவினர் உள்பட 2 பேர் கைது!

கோபி அருகே சொத்து தகராறில் மின்வாரிய ஊழியருக்கு கத்தியால் குத்திய அண்ணன் மகன் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கடுக்காம்பாளையம் சித்திவிநாயகர் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 28). இவர் கோபியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதேபோல், செட்டியாம்பாளையம் மணக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். அவருடைய மனைவி பட்டுச்செல்வி (45). இவர்களுடைய மகன் மோனீஷ் (25). இவர்கள் இடையே சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பட்டுச்செல்வியின் வீட்டுக்கு பாலசுப்பிரமணியம் சென்று சொத்து தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த பட்டுச்செல்வியின் மகன் மோனீஷ், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள வளையபாளையம் பகுதியை சேர்ந்த அவருடைய உறவினரான தேவராஜ் (26) ஆகியோர் சேர்ந்து பாலசுப்பிரமணியத்தை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த பாலசுப்பிரமணியம் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோனீஷ், தேவராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu