கோபி பிகேஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் காசநோய், தொழுநோய், டெங்கு விழிப்புணர்வு முகாம்

கோபி பிகேஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் காசநோய், தொழுநோய், டெங்கு விழிப்புணர்வு முகாம்
X

கோபி பிகேஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் கோபி பிகேஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் காசநோய், தொழுநோய், டெங்கு விழிப்புணர்வு முகாம் இன்று (ஜன.3) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கோபி வட்டாரம் பா.வெள்ளாளபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதிக்கு உட்பட்ட கோபி பிகேஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவியர்களுக்கு காசநோய் இல்லா ஈரோடு இயக்கம், தொழுநோய் ஒழிப்பு, டெங்கு, உண்ணி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.


இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், காச நோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள், ஆரம்ப நிலை தொழுநோயின் அறிகுறிகள், ஆரம்பநிலை தொழுநோய்க்கான சிகிச்சை எடுப்பதால் தவிர்க்கப்படும் அங்கஹீனங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், தொழுநோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாமின் நோக்கம், தீவிர காசநோய் மற்றும் தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்க நடவடிக்கைளில் மாணவர்களின் பங்கு, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், உண்ணி காய்ச்சல் பரவும் விதம் அதன் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள்,சுற்றுப்புற சுகாதார பராமரிப்பு வழிமுறைகள், எலிக்காய்ச்சல் அதன் பாதிப்புகள் தவிர்க்கும் வழிமுறைகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரகுபதி, வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் முருகேசன், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சிவகுமார், சுகாதார ஆய்வாளர் நவீன் குமார், கல்லூரி முதல்வர், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவியர்கள் 300 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், மாணவியர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டது.

Next Story