மொடக்குறிச்சி பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாம்
மொடக்குறிச்சி கரட்டாங்காடு பகுதியில் நடந்த காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாமில் பொதுமக்களுக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் (காசநோய் மருத்துவப் பணிகள்) மரு.ராமசந்திரன் வழங்கிய போது எடுத்த படம்.
மொடக்குறிச்சி கரட்டாங்காடு பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நேற்று (டிச.17) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டாரம் லக்காபுரம் ஊராட்சி கரட்டாங்காடு துணை சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட கொமாரபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் ஆலோசனையின் படி நடைபெற்ற இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய் இல்லா ஈரோடு இயக்கத்தின் நோக்கம் மற்றும் பயன்கள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.
இந்த முகாமை ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் மரு.ராமச்சந்திரன் மற்றும் உலக சுகாதார நிறுவன மண்டல ஆலோசகர் மரு.ரீனு ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து துணை இயக்குனர் காசநோய் மருத்துவ பணிகள் மரு.ராமச்சந்திரன் அவர்கள் காசநோயின் தாக்கங்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் காசநோய்க்கான பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதின் காரணம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
இந்த முகாமில் மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், சுதன் சர்மா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சிவகுமார், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 100 பேர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மார்பக நுண்கதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, காசநோய் இல்லா ஈரோடு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu