அறச்சலூர் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு, புகையிலை விழிப்புணர்வு முகாம்
அறச்சலூர் நெசவாளர் காலனியில் நடந்த காசநோய் இல்லா ஈரோடு, புகையிலை தடுப்பு விழிப்புணர்வு முகாமில் எடுத்த படம்.
அறச்சலூர் நெசவாளர் காலனியில் காசநோய் இல்லா ஈரோடு மற்றும் புகையிலை விழிப்புணர்வு முகாம் இன்று (டிச.19) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டாரம் அறச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட நெசவாளர் காலனியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்கம் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் அறிவுறுத்தலின் படி, நடைபெற்ற இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்கத்தின் நோக்கம் மற்றும் பயன்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல் பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை கிடைக்கும் இடம் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
இந்த முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார், மாவட்ட சுகாதார அலுவலக மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சிவகுமார், சுகாதார ஆய்வாளர் தேவராஜன், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 80 பேர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நெஞ்சக நுண் கதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, காசநோய் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும், அனைவராலும் காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu