ஈரோட்டில் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி: போலீசார் விசாரணை

ஈரோட்டில் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி: போலீசார் விசாரணை
X
ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு கொல்லம்பாளையம் முல்லை நகரை சேர்ந்தவர் தேவபிரசாந்த் (வயது 17). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று தனது அத்தை வீட்டிற்கு சென்று பால் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அலுச்சாம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக எதிரே வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக தேவ பிரசாந்த் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தேவ பிரசாந்த் தலையில் காயமடைந்து உயிருக்காக போராடினார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இது குறித்து தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேவ பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தேவ பிரசாந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. தேவபிரசாந்த் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story