50 ஆண்டு கால கோரிக்கை: தோனிமடுவு பள்ளத்தில் திருப்பூர் எம்பி, அந்தியூர் எம்எல்ஏ ஆய்வு
தோனிமடுவு பள்ளத்தில் திருப்பூர் எம்பி சுப்பராயன், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.
கொளத்தூர் பெரியதண்டா வனப்பகுதியில் உள்ள தோனிமடுவு பள்ளத்தை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் இன்று (நவ.18) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் பர்கூர் மலைப்பகுதியில் இருந்து வரும் காற்றாற்று வெள்ளம் பாலாற்றில் கலந்து மேட்டூர் அணைக்கு வருகிறது. அவ்வாறு வரும் காட்டாற்று வெள்ளத்தை சேலம் மாவட்டம் கொளத்தூர் பெரியதண்டா வனப்பகுதியில் உள்ள தோனிமடுவு பள்ளத்தில் தடுப்பணை கட்டி பைப் லைன் மற்றும் வாய்க்கால் மூலம் கொளத்தூர், அம்மாபேட்டை, அந்தியூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நிரப்பி பாசன வசதி ஏற்படுத்திட வேண்டும் என்று விவசாயிகள் 50 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இக்கோரிக்கையின் அடிப்படையில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் அவர்கள் மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் வனத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், கூட்டணி கட்சியினர், தோனிமடுவு திட்டத்தின் ஆர்வலர்களுடன் வனப்பகுதியில் உள்ள தோனிமடுவு பள்ளத்திற்கு நேரில் சென்று சுமார் மூன்று மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் இணைந்து தெரிவிக்கையில், இத்திட்டம் குறித்து தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வாயிலாக, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர், தமிழ்நாடு துணை முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோரின் பார்வைக்கு கொண்டுச் சென்று இதுகுறித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், இத்திட்டத்தில் மிக எளிதாக தோனிமடுவு பள்ளத்தில் தடுப்பணை கட்டி குன்னம் பள்ளம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீரை கொண்டு வந்து வன பகுதியில் உள்ள அகழிகளில் விடப்பட்டு அகழி வழியாக கொளத்தூர் அம்மாபேட்டை அந்தியூர் பகுதிகளில் உள்ள ஏரி குளம் குட்டைகளை நிரப்பி நீர் பாசன வசதிகளை செய்து தர கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரில் கலந்து பேசி தொடர் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.
இந்த ஆய்வுப் பணியின் போது, சென்னம்பட்டி வனச்சரக வன அலுவலர் ராஜா, கொளத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி, அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், ஈரோடு வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் முருகேசன், ஈரோடு வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், கம்யூனிஸ்ட் கட்சி அந்தியூர் தாலுகா செயலாளர் முருகேசன், காங்கிரஸ் கட்சியின் அந்தியூர் முன்னாள் வட்டார தலைவரும், வரட்டுப்பள்ளம் அணை பாசன விவசாயிகள் சங்க தலைவருமான நாகராஜா, காங்கிரஸ் கட்சியின் அம்மாபேட்டை வட்டாரத் தலைவர் விஜயகுமார், கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூர் தொகுதி பொறுப்பாளர் தேவராஜ் மற்றும் வனத்துறையினர், விவசாயிகள் உட்பட பலரும் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu