கோபி அருகே 21 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மின்தடை: டி.என்.பாளையம் மின்துறையை கண்டித்து சாலை மறியல்

டி.என்.பாளையம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்.
கோபி அருகே 21 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மின்தடை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டி.என்.பாளையம் மின்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என் பாளையம் துணை மின் நிலையத்தில் நேற்று (டிச.26) பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், நேற்று மதியம் 2 மணி முதல் இன்று (டிச.27) காலை 10 மணி டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளான கள்ளியங்காடு, எம்.ஜி.ஆர் நகர், கொப்பு திட்டு, சாமியார் காளை உள்ளிட்ட பகுதிகளில் 21 மணி நேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் இல்லை.
இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தை தொடா்பு கொண்டாலும் உரிய பதில் இல்லையாம். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம்- அத்தாணி சாலையில டி.என்.பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த பங்களாப்புதூர் போலீசார் மற்றும் மின்துறை அதிகாரிகளிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர், இதனால் சத்தியமங்கலம்- அத்தாணி சாலையில சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து டி.என் பாளையம் மின்துறை அதிகாரியிடம் கேட்டபோது, நேற்று இரவு தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், இன்சுலேட்டர் பழுது ஏற்பட்ட காரணத்தாலும உடனடியாக சரி செய்ய முடியவில்லை. பழுதை சரிசெய்து உடனடியாக மின் விநியோகம் வழங்கி விடுவதாக மின்துறை அதிகாரி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu