கோபி அருகே லாரி டிரைவரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் உள்பட 3 பேர் கைது

கைது செய்யப்பட்ட 3 பேரை படத்தில் காணலாம்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சேத்துகாட்டுபுதூர், வரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மகன் மூர்த்தி (வயது 43). டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் கிரஷர் தொழிற்சாலையில் டிப்பர் லாரி டிரைவராக உள்ளார்.
இவர், நேற்று முன்தினம் முறையான சான்றிதழ்களுடன் 3 யூனிட் கருங்கற்களை ஏற்றிக்கொண்டு நஞ்சகவுண்டம்பாளையத்துக்கு சென்று கொண்டு இருந்தார். அந்த பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே சென்றபோது லாரியை 3 பேர் மறித்தனர்.
இதனால், லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய மூர்த்தியிடம் 3 பேரும், திருட்டுத்தனமாக கருங்கல் கடத்துகிறாயா? உன்னுடைய முதலாளிக்கு தகவல் கொடுத்து உடனே ரூ.1 லட்சம் கொண்டு வரச்சொல் இல்லை என்றால் உன்னையும், லாரியையும் கொளுத்தி விடுவோம் என்று மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து, டிரைவர் மூர்த்தி உடனே கோபி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் மூர்த்தியை மிரட்டிய 3 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் கோபியை சேர்ந்த ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் யுவராஜ் (46), கலிங்கியத்தை சேர்ந்த சதீஷ் (34), பவானியை சேர்ந்த தர்மலிங்கம் ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu