ரூ.1.02 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

ரூ.1.02 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

சித்தோடு சந்தை மேடு பகுதியில் சமுதாய கூடத்தினை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

சித்தோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.02 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூர் மற்றும் சித்தோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.02 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (15ம் தேதி) திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சூரியம்பாளையம், மண்டலம் -1, ஆர்.என். புதூர். ஜவுளி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும், இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதியின் கீழ் சித்தோடு பேரூராட்சி வார்டு எண்.10 சத்தி மெயின் ரோட்டில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தின் முதல் தளத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சமையல் அறை மற்றும் உணவு அருந்தும் அறையினையும் அமைச்சர் திறந்து வைத்தார்.


தொடர்ந்து, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் பயின்றவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இச்சமுதாயக்கூடத்தில் ஏற்கனவே 300க்கும் மேற்பட்ட நபர்கள் அமரக்கூடிய ஹால் வசதி உள்ளது. தற்பொழுது முதல் தளத்தில் உணவு அருந்தும் அறையும், சமையல் அறையும் புதியதாக கட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களும், சித்தோடு மற்றும் அருகில் உள்ள கிராமங்களான பேரோடு, குமிளம்பரப்பு, சாணார்பாளையம் மற்றும் கன்னிமாகாடு கிராமங்களைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற உள்ளதாக தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, அம்ரூத் 2.0 திட்டம் 2023-2024 சித்தோடு பேரூராட்சி வார்டு எண்.12 இந்திரா நகர் பகுதியில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யப்பட்ட பூங்காவினை திறந்து வைத்தார். இப்பூங்காவின் மூலம் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் விளையாடவும் இங்கு வசிக்கும் சுமார் 450க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவும், அருகில் உள்ள வார்டுகளான நடுப்பாளையம், நல்லாக்கவுண்டன்பாளையம், பாலாஜி நகர், ஆதித்யா நகர், மற்றும் ஆண்டாள் நகர் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளும் பொது மக்களும் பயன் பெறவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


இதனையடுத்து, நமக்கு நாமே திட்டம் 2023-2024 சித்தோடு பேரூராட்சி வார்டு எண்.14 பாலாஜி நகர், ஆதித்யா நகர் மற்றும் ஆண்டாள் நகர் பகுதிகளில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக போர்வெல் அமைத்து மின்மோட்டார் வைத்து 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் குழாய் அமைக்கப்பட்ட மேல்நிலைத் தொட்டியினை திறந்து வைத்தார். இத்திட்டத்தின் மூலம் அப்பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பொது மக்களும் துறையூர், நல்லாக்கவுண்டன் பாளையம் பகுதிகளில் வசிக்கும் சுமார் 400-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பயன் பெறுவார்கள் என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ். முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து. ஈரோடு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் திரு.பிரகாஷ். 1ம் மண்டல குழு தலைவர் பி.கே.பழனிசாமி, மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story