ஈரோடு - கோபிசெட்டிபாளையம் நான்கு வழிச்சாலையில் சுங்கசாவடி அமைக்க எதிர்ப்பு

ஈரோடு - கோபிசெட்டிபாளையம் நான்கு வழிச்சாலையில்  சுங்கசாவடி அமைக்க எதிர்ப்பு
X

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தகுதிரையில் சுங்க சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து  நடைபெற்ற கூட்டம் .

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்த குதிரையில் சுங்க சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் நடைபெற்றது

ஈரோட்டில் இருந்து கோபி வழியாக மேட்டுப்பாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக ஈரோட்டில் இருந்து சித்தோடு, கவுந்தப்பாடி, கோபி அருகே உள்ள கரட்டடிபாளையம் வரை 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.இதில் புறநகர் பகுதியில் 120 அடி அகலமும் நகர்ப்புற பகுதியில் 60 அடி எனவும் ஊரக பகுதியில் 80 அடி என மூன்று வகையாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக நிலம் எடுப்பு, நிலம் கையகப்படுத்துதல் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது 4 வழிச்சாலைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதற்கிடையே கோபி அருகே உள்ள ஓடத்துறை ஊராட்சிக்குட்பட்ட பாலப்பாளையத்தில் சுங்கசாவடி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சுங்கசாவடிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதைத்தொடர்ந்து சுங்கசாவடிக்கு எதிராக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகுசாமி தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சமீர் உல்லா,செயலாளர் அஜ்மல் உசேன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மோகன், தமிழக வாழ்வுரிமை கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன்,மனிதநேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் சலீம் ராஜா, பாப்புலர் பிரெண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது முஸ்தபா,பொறியாளர் சங்க நிர்வாகி கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து போராட்ட குழு ஒருங்கிணைப்பாளரும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனருமான ஈசன் முருகுசாமி கூறும் போது, ஈரோடு மாவட்டம் முழுவதும் விவசாயம் சார்ந்து உள்ள நிலையில் சுங்கசாவடி அமைக்கப்படும் போது விவசாயிகளே பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.குறிப்பாக கோபி, சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் மைசூர் போன்ற பகுதியில் இருந்து விவசாய விளை பொருட்கள் கொண்டு செல்லப்படும் போது விவசாயிகள் பாதிக்கப்படுவர்.60 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு சுங்க சாவடி தான் அமைக்க வேண்டும் என்ற நிலையில் 33 கிலோ மீட்டர் தூரத்தில் மீண்டும் டோல்கேட் அமைக்கப்படுகிறது.

இனி வரும் காலங்களில் சுங்கசாவடிகள் அகற்றப்பட்டு சாலைகள் மட்டும் சுங்க சாலைகளாக மாற்றப்படும். அப்போது சுங்க சாலையில் செல்லும் ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஜி.பி.ஆர்.எஸ். மூலமாக வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு பாஸ்ட்டேக் மூலமாக கட்டணம் தானியங்கி முறையில் வசூலிக்கப்படும். இதனால் சுங்கசாவடி மட்டுமின்றி சுங்கசாலையாக மாற்றுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றனர். எதிர்ப்பை மீறி சுங்கசாவடி அமைக்கப்பட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றார்.

கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் மாதேஷ்வரன்,எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொகுதி தலைவர் தஸ்தகீர் அலி, ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி பாஷா, மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, வடக்கு மாவட்ட ஊடக பொறுப்பாளர் சால்மன், கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி தலைவர் முனுசாமி, பொறியாளர் சங்க முன்னாள் தலைவர் அருண்,தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம்,மதிமுக ஒன்றிய துணை செயலாளர் செந்தில், ஓர்க்‌ஷாப் உரிமையாளர்கள் மெக்கானிக் சங்கம் மற்றும் சரக்கு ஆட்டோ சங்க நிர்வாகிகள் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil