ஈரோடு | அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைப்பதை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

அம்மாபேட்டையில் கட்டணம் வசூலிக்க தயார் நிலையில் உள்ள சுங்கச்சாவடியை படத்தில் காணலாம்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், பவானி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கே.சி.கருப்பண்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைப்பதை கடுமையாக எதிர்த்து உள்ளூர் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், அந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுக்கொள்வது இல்லை. இந்த சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால் உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
தங்களது விவசாயப் பொருட்களை வாகனத்தில் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமம் ஏற்படும். அதுமட்டுமல்ல, இந்த சாலை பணிகள் முறையாக செய்யப்படவில்லை. இதனால், விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஏற்கனவே 7 மீட்டர் அகலமாக இருந்த இரு வழிச்சாலை 10 மீட்டராக அதிகப்படுத்தி, சுங்கச்சாவடியை அமைக்கின்றனர். குறுகலான வளைவுகள் உள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படும். குறிப்பிட்ட இந்த வழித்தடத்தை சுங்கச்சாவடி சாலையாக மாற்றுவது தேவையற்றது. இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
எனவே அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் நர்மதா சம்பத் ஆஜராகி, இருவழிச் சாலையை குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நான்கு வழிச்சாலையாக மாற்றி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 4 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்றார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், சுங்கச்சாவடி அமைப்பது தொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
அதற்கு நீதிபதி, சாலை விரிவாக்கப் பணிக்காக 4 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதை தீவிரமாக கவனத்தில் கொள்ளப்படும். எனவே. இந்த வழக்கில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன்.
இந்த வழக்கிற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் விசாரணையை வருகிற 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu