பவானி அருகே வீட்டை கோயிலுக்கு தானமாக எழுதி வைத்ததற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு
கோயில் அதிகாரிகள் திடீரென அறிவிப்பு பலகை வைக்க சென்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காடப்பநல்லூர் ஊராட்சி, குதிரைக்கல்மேட்டைச் சேர்ந்தவர் பழமலை (63). மின்வாரிய ஒப்பந்ததாரரான இவர், கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக தனது மனைவி முத்துலட்சுமி, மகன் பிரபுகுமார், மகள்கள் மோகனவள்ளி, காந்திமதி ஆகியோரை பிரிந்து வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பல்வேறு இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், கடந்த மாதம் 22-ஆம் தேதி பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு சென்ற இவர், தனக்கு சொந்தமாக குதிரைகல்மேட்டில் உள்ள 770 சதுர அடி நிலம் மற்றும் வீட்டினை கோயிலுக்கு தானமாக எழுதி வைப்பதாகக் கூறி தான செட்டில்மெண்ட் செய்து வைத்ததோடு, அம்மாபேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
இதனையடுத்து கோயில் உதவி ஆணையர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் கோயிலுக்கு தான செட்டில்மெண்டாக அளித்த நிலம் மற்றும் வீடு குறித்து ஆய்வு செய்ததோடு, அங்கு கோயிலுக்கு சொந்தமான நிலம் என்பது குறித்த அறிவிப்பு பலகை வைக்க சென்றனர். இடத்தை கண்டறிந்த கோயில் ஊழியர்கள் அங்கு அறிவிப்பு பலகை வைத்தபோது வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து குடும்பத்தினர் விசாரித்த போது, பழமலை தனது சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய நிலத்தை, பழமலை கோயிலுக்கு தானமாக எழுதி வைத்திருப்பதாக கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பழமலையின் மகன் பிரபு குமார் (38), பவானி - மேட்டூர் சாலையில் தனது வீட்டின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றார். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அம்மாபேட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பிரபுகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அப்பகுதியில் இயல்புநிலை திரும்பியது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக பழமலை, வீட்டை விட்டு சென்று விட்டார். வறுமையில் தவித்த குடும்பத்தினர் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறினர். பிரபுகுமார் தனது இரு தங்கைகளுக்கும் திருமணம்.
செய்து வைத்தார். தற்போது இவருக்கும் திருமணமாகி, மனைவி, மூன்று வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் யாருக்கும் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் பழமலை சொத்தை கோயிலுக்கு தானமாக எழுதி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தரக்கோரி அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பவானி சங்கமேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோயில் நடக்கும் யாருக்கும் தெரியாமல் ஒப்பந்ததாரர் தானமாக வழங்கிய சம்பவத்தால் பரபரப்பு காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu