Erode District Crime Incidents in 2024 | ஈரோடு மாவட்ட குற்றங்களின் ஆண்டறிக்கை: அதிரடி காட்டிய போலீசார்
ஈரோடு மாவட்ட காவல் அலுவலகம். உள்படம்:- ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர்.
ஈரோடு மாவட்டத்தில் 2024ம் ஆண்டு நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்தும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் ஆண்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 2024ம் ஆண்டில் ஈரோடு மாவட்ட காவல் துறையினர் சிறந்த முறையில் பணியாற்றி, கடந்த ஆண்டை காட்டிலும் கொலை, கொள்ளை வழக்குகள் வெகுவாக குறையும் வகையில் திறம்பட பணியாற்றியுள்ளனர். குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல் நிலையங்களில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரவுடிகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. காவல் நிலையத்திற்கு வரும் மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு 33 கொலை வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 28 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 7 வழக்குகள் குடும்பத்திற்குள் நடைபெற்ற சண்டையின் காரணமாக நடைபெற்ற கொலை வழக்குகளாகும்.
பதிவான அனைத்து கொலை வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு 49 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 378 குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டும், அதில் 517 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், அவர்களிடமிருந்து 102 வாகனங்கள் மற்றும் 844 சவரன் நகைகள் உட்பட ரூ.2 கோடியே 98 லட்சத்து 73 ஆயிரத்து 890 மதிப்புள்ள 80 சதவீத களவு சொத்துகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
2024ம் ஆண்டில் 78 கொடுங்குற்ற வழக்குகளில் 77 கொடுங்குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டும் அதில் 158 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், அவர்களிடமிருந்து 7 வாகனங்கள் மற்றும் 621 சவரன் நகைகள் உட்பட ரூ.1 கோடியே 87 லட்சத்து 68 ஆயிரத்து 200 மதிப்புள்ள 93% களவு சொத்துகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், 408 சாதாரண குற்ற வழக்குகளில் 329 குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டும் அதில் 95 வாகனங்கள் மற்றும் 223 சவரன் நகைகள் உட்பட ரூ.1 கோடியே 11 லட்சத்து 5 ஆயிரத்து 690 மதிப்புள்ள 64 சதவீத களவு சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 51,179 நபர்கள் மீது உரிய கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 218 லாட்டரி வழக்குகளில் 275 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிர கஞ்சா தடுப்பு நடவடிக்கையின் மூலம் 1 ஹெராயின் வழக்கு, 294 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு 396 நபர்களை கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.46 லட்சத்து 50 ஆயிரத்து 950 மதிப்புள்ள 50 கிராம் ஹெராயின், 466 கிலோ கஞ்சா, மற்றும் ரூ.2 லட்சத்து 71 ஆயிரத்து 800 மதிப்புள்ள 11658 போதை மாத்திரைகள் மற்றும் ரூ.25 ஆயிரத்து 750 மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது.
15 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேற்படி தீவிர கஞ்சா தடுப்பு நடவடிக்கையின் மூலம் முந்தைய ஆண்டை காட்டிலும் அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்றதற்காக 761 வழக்குகள் பதியப்பட்டு 769 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 11,725 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும், அதில் 6 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அதில், 4,486 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் உரிய முறையில் அழிக்கப்பட்டுள்ளது. அரசு மதுபானங்கள், வெளிமாநில மதுபானங்கள் கள்ளசந்தையில் பதுக்கியும் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் மீது 3,162 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,295 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 35,731 மதுபாட்டில்கள், 79 லிட்டர் சாராயம் மற்றும் 480 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 698 லிட்டர் கள்ளும், மேலும் வெளிமாநில மதுபாட்டில்கள் 11,565 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து 3567 லிட்டர் மதுபானம் உரிய முறையில் அழிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனாமதையான 219 இருசக்கர வாகனங்கள் ரூ.5,26,398/- ஏலம் விடப்பட்டது. மேலும் 31 மணல் திருட்டு வழக்குகளில் 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 31 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 147 சூதாட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 761 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.91,890 பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் கிராமங்களில் காவல்துறையினர் மூலம் 6,444 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு மற்றும் காவல் உதவி செயலி மூலம் 12,910 பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்து பதிவிறக்கம் செய்யப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி, விழிப்புணர்வின் விளைவாக 36 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 270 POCSO வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 15 வழக்குகளின் குற்றவாளிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பு காவலுக்கு அனுப்பப்பட்டது. இந்தாண்டு நீதிமன்றத்தில் 4 வழக்குகளில் உள்ள 3 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும், 1 குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணையும், 3000 ரூபாய் அபராதமும் பெறப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
2023ம் ஆண்டில் 33 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட 2024- ம் ஆண்டில் 55 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 429 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது சிறப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட கோட்டாச்சியர் மூலம் நன்னடத்தைக்கான பிணைபத்திரம் பெறப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 41 குற்றவாளிகளை கண்காணிக்கும் பொருட்டு சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டு அவர்களை கண்காணிப்பட்டு வருகிறது.
இணையதள மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பாக பெறப்பட்ட 3,379 மனுக்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இணையவழி மூலமாக மோசடி செய்து ஏமாற்றப்பட்ட ரூ.3 கோடியே 19 லட்சத்து 82 ஆயிரத்து 490 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு 507 அலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு சிறப்பான முறையில் செயல்பட்டு காணாமல் போன 699 அலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
2024ம் ஆண்டில் 3,633 பொதுமக்கள் குறை தீர்ப்பு கோரிக்கை மனு பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து சட்ட ஒழுங்கை நன்முறையில் பராமரிக்கவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சாலை விபத்துகளை தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu