ரூ.15.90 லட்சம் கையாடல் வழக்கு: கோபி கூட்டுறவு சங்க செயலாளருக்கு 5 ஆண்டு சிறை

ரூ.15.90 லட்சம் கையாடல் வழக்கு: கோபி கூட்டுறவு சங்க செயலாளருக்கு 5 ஆண்டு சிறை
X

பைல் படம்.

ரூ.15.90 லட்சம் கையாடல் செய்த வழக்கில் கோபி கூட்டுறவு கட்டுமான சங்க செயலாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ரூ.15.90 லட்சம் கையாடல் செய்த வழக்கில் கோபி கூட்டுறவு கட்டுமான சங்க செயலாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஈரோடு மாவட்டம் கோபியில் கோபிசெட்டிப்பாளையம் கூட்டுறவு கட்டுமான சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு ஜி.கே.வெங்கடேசன் என்பவர் செயலாளராக பணியாற்றி வந்தார்.

இங்கு பல்வேறு முறைகேடு மற்றும் பணம் கையாடல் நடப்பதாக ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து கடந்த 21-4-2009 அன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சங்க செயலாளர் வெங்கடேசனிடம் ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்து 76 இருந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்தபோது, அந்த பணத்தை சங்கத்தின் பல்வேறு உறுப்பினர்களின் நிரந்தர வைப்பு நிதியில் இருந்து, அவர்களுக்கு தெரியாமல் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட நபர்கள் தங்கள் வைப்புத்தொகையில் இருந்து கடன் பெற்றதாக கோப்புகள் தயார் செய்து, அவர்களுக்கு தெரியாமலேயே பணத்தை கையாடல் செய்த குற்றத்துக்காக அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவர் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பான, வழக்கு ஈரோடு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தலைமை நீதிபதி எஸ்.ராமச்சந்திரன் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், குற்ற வழக்கில் பதிவு செய்யப்பட்ட பிரிவு வாரியாக தீர்ப்பு அளித்தார்.

அதன்படி, 3 பிரிவுகளை சேர்த்து ஒரு ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம், 5 பிரிவுகளுக்கு 2 ஆண்டு ஜெயில் ரூ.5 ஆயிரம் அபராதம், 2 பிரிவுகளுக்கு 2 ஆண்டு ஜெயில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதன்படி, மொத்தம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க தலைமை நீதிபதி எஸ்.ராமச்சந்திரன் அந்த தீர்ப்பில் கூறி இருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராதா ஆஜரானார்.

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!