ஈரோட்டில் காலை சிற்றுண்டி திட்டத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்
ஈரோடு கொல்லம்பாளையம் அரசு தொடக்க பள்ளியில் இன்று காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார். அருகில் மேயர் நாகரத்தி னம், சுப்பிரமணியம் உள்பட பலர் உள்ளனர்.
தமிழக அரசு சார்பில் அரசு தொடக்க பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து அண்ணா பிறந்த நாளையொட்டி நேற்று மதுரையில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் 1,545 அரசு தொடக்க பள்ளிகளை சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அந்தந்த மாவட்டங்களில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவங்கி வைக்கப்பட்டது ஈரோடு மாநகராட்சி கொல்லம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, துணை மேயர் செல்வராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.. ஈரோடு வட்டத்தில் 26 தொடக்க பள்ளிகளில் பயிலும் 2,523 மாணவர்களும், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள 38 பள்ளிகளை சேர்ந்த 768 மாணவர்கள் என மொத்தம் 3,291 மாணவர்கள் பயனடைந்துள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார். முதல் நாளான இன்று கோதுமை ரவா, ரவா கேசரி வழங்கப்பட்டது.
இதேபோல், தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திகனாரை அரசு தொடக்க பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் மதுபாலன் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu