ஈரோட்டில் 65வது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் துவக்கம்
65வது மாநில அளவிலான குடியரசு தின தடகள விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு ஒலிம்பிக் தீபத்தை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஏற்றி வைத்த போது எடுத்த படம்.
ஈரோட்டில் பள்ளி கல்வித் துறையின் சார்பில் 65வது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் 2024-2025ஐ மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (நவ.6) துவக்கி வைத்தார்.
ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில், பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 65வது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் 2024-2025ஐ மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (நவ.6) புதன்கிழமை துவக்கி வைத்தார். முன்னதாக, அவர் தேசியக் கொடி ஏற்றி வைத்து, பல்வேறு மாவட்டத்தின் விளையாட்டு அணி தலைவர்களை தலைமை தாங்கி நடைபெற்ற விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, தடகள போட்டி உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் வாசித்து ஏற்றுக்கொண்டதையடுத்து, 65வது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகளை முன்னிட்டு ஒலிம்பிக் தீபத்தினை அவர் ஏற்றி வைத்தார். இதையடுத்து, வண்ண பலூன்கள் மற்றும் புறாக்களை பறக்க விட்டார். அதனைத் தொடர்ந்து, 14, 17, 19 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இந்த 65வது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் இன்று (நவ.6) முதல் நவ.11 வரை நடைபெறுகிறது.
இப்போட்டிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த 2,710 வீரர்கள் மற்றும் 2,517 வீராங்கனைகள் என 5,227 வீரர், வீராங்கனைகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கிறார்கள். தடகள விளையாட்டு போட்டிகளில் 14 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு 100 மீட்டர். 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 600 மீட்டர் ஓட்டம், 80 மீட்டர் தடை தாண்டி ஓடும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டெறிதல், 4 × 100 மீட்டர் தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது.
அதேபோல், 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர், 1,500 மீட்டர், 100 மீட்டர் தடை தாண்டி ஓடும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், கையுந்தி தாண்டும் போட்டி, கோலுந்தி தாண்டும் போட்டி, குண்டு எறிதல், வட்டெறிதல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ், முதன்மைக் கல்வி அலுவலர் சுப்பாராவ், இணை இயக்குநர், நாட்டு நலப்பணி திட்டம் சசிகலா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாலமன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சதீஷ்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu