பவானியில் மரக்கன்றுகள் நடும் விழா, விழிப்புணர்வு முகாம்: ஆட்சியர், முதன்மை மாவட்ட நீதிபதி துவக்கி வைத்தனர்!

பவானியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் பெருவிழா மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, முதன்மை மாவட்ட நீதிபதி பி.முருகேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே காடையாம்பட்டியில் உள்ள தனியார் மஹாலில் ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் பெருவிழா மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்றது. இதனை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, முதன்மை மாவட்ட நீதிபதி பி.முருகேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 5,200 சதுர கிலோமீட்டர். 5,200 சதுர கிலோமீட்டரில் 39 சதவீதம், அதாவது கிட்டத்தட்ட 2,000 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியாக உள்ளது.
நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் நகரமயமாக்கல் காரணமாக மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி ஒவ்வொரு ஆண்டும் மரங்களை நடுவதற்கு இலக்கினை நிர்ணயித்து, அனைத்து மாவட்டங்களும் இலக்கினை எய்திட அறிவுறுத்தி வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்திற்கு 2024-25ம் ஆண்டு 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அதேபோல நடப்பாண்டிற்கு 4 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கினை எய்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்டத்தின் நோக்கம் மரக்கன்றுகளை நடுவது மட்டுமல்லாமல், அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மரங்களுக்கு நாள்தோறும் தண்ணீர் விடுவதற்கும், கம்பி வேலி அமைத்து பாதுகாப்பதற்கும் எங்கெங்கே வாய்ப்புகள் உள்ளதோ அங்கே மரங்களை நடும் பொழுது, அதனை நல்லமுறையில் வளர்த்து பாதுகாப்பதற்கான வாய்ப்புகளும் அதிகளவில் உள்ளது.
ஒவ்வொரு மாவட்டமும் வளர்ச்சி அடைந்தால் தான் நாடும் வளர்ச்சி அடையும். எனவே மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து, முதன்மை மாவட்ட நீதிபதி பி.முருகேசன் தெரிவித்ததாவது, சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு நாட்கள் மரக்கன்றுகள் நடவேண்டும் என்றும், ஒரு நாளைக்கு குறைந்தது 100 மரக்கன்றுகளை நட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று (ஏப்ரல் 18) ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இவ்விழா நடைபெறுகிறது.
இவ்விழா சிறப்பாக நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கும், பிற அரசு துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நீதி துறையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பூமியினுடைய ஆதாரம் மரங்கள் தான். இந்த மரங்களில் இருந்து விழக்கூடிய இலைகள் மக்கி உரமாகி நிலம் வளம் பெறுகிறது.
காற்று மாசு அகற்றப்பட்டு பிராணவாயு கிடைக்கிறது. எனவே இந்த விழா எந்த நோக்கத்திற்காக நடத்தப்படுகிறதோ, அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றும் வகையில் இங்கே இருக்கக்கூடிய அனைவரும் இந்த கருத்துக்களை எடுத்துச் சென்று மக்களிடையே தெரிவித்து, இந்த நோக்கம் முழுமையாக வெற்றி அடைவதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அர்பித் ஜெயின், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட் அப்பால நாயுடு, மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.சண்முகவடிவு, நிரந்தர மக்கள் நீதிமன்றம் தலைவர் வி.பி.சுகந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கே.வித்யா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.ராமசந்திரன் உள்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu