பாஜக, திமுகவைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு
மொடக்குறிச்சி காவல் நிலையம்.
மொடக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் பாஜகவினர் அளித்த புகார் மீது பேரூராட்சி தலைவர் உள்பட 9 பேர் மீதும், திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனு மீது பாஜக மாவட்ட உள்ளாட்சி பிரிவு தலைவர் சிவசங்கர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி நள்ளிரவில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக நஞ்சை ஊத்துக்குளி, மொடக்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
இந்த போஸ்டரை அகற்றும்படி பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் சுந்தரம், பேரூராட்சி பெண் தலைவர் செல்வாம்பாள் ஆகியோர் மொடக்குறிச்சி போலீசில் புகார் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து மொடக்குறிச்சி போலீசார் தூய்மை பணியாளர்கள் மூலம் போஸ்டர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பழைய யூனியன் அலுவலகம் அருகே போஸ்டர் அகற்றும் பணி நடந்தபோது அங்கு வந்த பாஜக பிரமுகர் சிவசங்கருக்கும், பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் மற்றும் அங்கிருந்த கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. சம்பவம் குறித்து பாஜக மற்றும் திமுக தரப்பில் ஒருவர் மீது ஒருவர் மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர். பாஜக தரப்பில் சிவசங்கர் மற்றும் திமுக தரப்பில் பேரூராட்சி பெண் தலைவர் செல்வாம்பாள், தலைவரின் கணவரும் மொடக்குறிச்சி பேரூர் கழகச் செயலாளருமான சரவணன், ஆகிய 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில் பாஜக மாவட்ட உள்ளாட்சி பிரிவு தலைவர் சிவசங்கர் அளித்த புகார் மீது மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் (47), அவரது கணவர் சரவணன் (56) 5வது வார்டு கவுன்சிலர் மகன்யா (26), 4வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி (45) 6வது வார்டு கவுன் சிலர் பிரதீபா (37), 12வது வார்டு கவுன்சிலர் கார்த்தி கேயன் (36), 15வது வார்டு கவுன்சிலர் கண்ணுசாமி (65), அண்ணமார் நகர் தமிழரசு (36), பகவதிநகர் ஆனந்தராஜ் (32) ஆகிய 9 பேர் மீது கையால் அடித்தல், கெட்ட வார்த்தை பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழும், திமுக சார்பில் பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் அளித்த புகார் மீது செலம்பகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்ட உள்ளாட்சி பிரிவு தலைவர் சிவசங்கர் மீது கையால் அடித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் எஸ்சிஎஸ்டி பிரிவின் கீழ் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu