ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்
ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டுபிடிப்பு முகாம் இன்று (டிச.12) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் ஈரோடு மாநகராட்சி பி.பெ.அக்ரஹாரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட 15வது வார்டு அன்னை சத்யா நகர் பகுதியில் காச நோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் அறிவுறுத்தலின்படி, நடைபெற்ற இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்கத்தின் நோக்கம், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, அயோடின் சத்து குறைபாட்டினால் கர்ப்பிணி பெண்கள், வளர் இளம் பெண்கள், குழந்தைகள், பள்ளி சிறார்கள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் உடல் பிரச்சினைகள், அயோடின் சத்துள்ள உணவு வகைகள், கடைகளில் அயோடின் சத்து சேர்க்கப்பட்டுள்ள உப்பு வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.
இந்த முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர் கார்த்திபன், காசநோய் சுகாதார பார்வையாளர் லீலாவதி, சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், வினோத், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர் மற்றும் பொதுமக்கள் 50 பேர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவின் மூலமாக மார்பக ஊடுகதிர் பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu