ஈரோட்டில் காவிரி ஆற்றங்கரை ஓரம் மதுக்கடை அமைக்கும் திட்டம் இல்லை.. டாஸ்மாக் நிர்வாகம்…
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டத்தில் உள்ள லக்கனாபுரம் சாலையில் ஒரு மதுக்கடை உள்ளது. அந்த மதுக்கடையை காவிரி ஆற்றங்கரை ஓரம் மாற்றி அமைக்க உள்ளதாக தகவல் பரவியது. காவிரி ஆற்றங்கரை ஓரம் மதுக்கடையை மாற்றினால் பல்வேறு பிரச்சினைகள் நிலவும் என்றும் பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், லக்கனாபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு தொடர்பான மனுவில், லக்கனாபுரம் கிராமத்திற்கு தொலைவில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை, கொக்கராயன்பேட்டை - லக்கனாபுரம் சாலையில் உள்ள காவிரி ஆற்றுப்பாலம் அருகே மாற்ற இருப்பதாகவும், அந்தப் பகுதியில் படகுத்துறை, மகளிர் குளிக்கும் இடம் ஆகியவை உள்ளதாக மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், காவிரி ஆற்றுப்பாலம் அருகே டாஸ்மாக் மதுபானக்கடையை அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சரவணன் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கொக்கராயன்பேட்டை- லக்கனாபுரம் சாலையில் உள்ள குறிப்பிட்ட மதுக் கடையை காவிரி ஆற்றங்கரையோரம் மாற்றி அமைக்கும் திட்டம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்த பதிலை பதவி செய்துக் கொண்ட நீதிபதிகள் இருவரும் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu