பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவர் நேரில் விசாரணை
கோபி அரசு மருத்துவமனையில் 2 இளைஞர்களிடமும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் சிவகுமார் விசாரணை நடத்தினார். அருகில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளார்.
கோபி அருகே பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 2 பட்டியலின இளைஞர்களிடம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தலைவர் சிவகுமார் சனிக்கிழமை நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த சிறுவலூர் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் வீடுகளில் வளர்த்து வந்த கோழிகளை திருடி சென்றதாக கடந்த நவம்பர் 21ம் தேதி பட்டியலினத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களை ஊர் பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதில், படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து கோழி திருடியதாக 2 பேர் மீதும் சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கோழி திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் மீது சிலர் சிறுநீர் கழித்தும் சாதி பெயரை குறிப்பிட்டு அவதூறாக பேசியதாகவும் கடந்த 24ம் தேதி 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனை அறிந்த கிராம மக்கள், தங்கள் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து கடந்த 25ஆம் தேதி கோபி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டங்கள் அறிவித்த நிலையில் கடந்த 28ம் தேதி கோபி கோட்டாசியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் திவ்ய பிரியதர்ஷினி முன்னிலையில் தனித்தனியாக இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 இளைஞர்களிடமும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சிவகுமார், துணைத் தலைவர் புனிதா பாண்டியன் மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள் இளஞ்செழியன், ரேகா பிரியதர்ஷினி ஆகியோர் சனிக்கிழமை நேரில் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால சுன்கரா மற்றும் மாட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர், கோபி கோட்டாட்சியர் திவ்ய பிரியதர்ஷினி, வட்டாட்சியர் உத்திரசாமி, போலீசார் துணை சூப்பிரண்டு தங்கவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu