பவானிசாகர் அணை தண்ணீர் திடீர் நிறுத்தம்: சோகத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள்!

பவானிசாகர் அணை தண்ணீர் திடீர் நிறுத்தம்: சோகத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள்!
X

கீழ்பவானி வாய்க்கால் கரையில் ஓட்டை ஏற்பட்டு சேதமடைந்திருப்பதை படத்தில் காணலாம்.

சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் கிளை வாய்க்காலில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன திட்டத்தின் மூலம் ஈரோடு. திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2.7 லட்சம் ஏக்கர் நிலம் நேரடியாகவும், 40,000 ஏக்கர் நிலம் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றன.

தற்போது அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதியில் உள்ள ஒற்றைப்படை மதகுகளுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நன்செய் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணையில் இருந்து 6 ஆவது மைல் தூரத்தில் செண்பகபுதூர் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் இடது கரையில் கிளை வாய்க்கால் அமைந்துள்ள பகுதியில் கரையில் 6 அடி விட்டம் மற்றும் 8 அடி ஆழத்திற்கு திடீரென ஓட்டை விழுந்து சேதமடைந்தது. அந்த ஓட்டை வழியாக பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கிளை வாய்க்காலில் அதிக அளவில் வெளியேறியது.

இதனைக் கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நீர்வளத்துறை அதிகாரிகள் வாய்க்கால் கரையில் ஓட்டை விழுந்து மண்அரிப்பு ஏற்பட்டு கிளை வாய்க்காலில் அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதைக் கண்டு உடனடியாக பவானிசாகர் அணை பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையெடுத்து, மாவட்ட கலெக்டரின் ஆலோசனையின் படி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க் காலில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து மணல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு தண்ணீர் மேலும் கசியாத வகையில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து வாய்க்காலுக்கு வரும் தண்ணீர் முழுமையாக நின்றதும் குழியை சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது. மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் குழியை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டு 24 மணி நேரம் ஆகியும் நீரோட்டம் குறையவில்லை. 2 நாட்கள் கழிந்தால் தான் நீரோட்டம் குறையும். நீரோட்டம் முழுவதும் குறைந்த பின்னர் தான் வாய்க்கால் கரையில் ஏற்பட்ட ஓட்டையை முழுவதுமாக அடைக்க முடியும். இதை பார்க்கும்போது வாய்க்கால் கரை பலப்படுத்தப்பட்டு மீண்டும் வாய்க்காலில் தண்ணீர் திறக்க குறைந்தது ஒரு வாரமாவது ஆகும் என தெரிகிறது என்றனர்.

பவானிசாகர் அணியில் இருந்து தண்ணீர் கிடைக்க இன்னும் ஒருவாரத்துக்கும் மேல் ஆகும் என்பதால் கீழ்பவானி பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!