ஈரோடு புத்தக கண்காட்சியில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள்
ஈரோடு புத்தக கண்காட்சி அரங்குகள் முன்பு நின்று குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்ட கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள்.
கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈரோடு புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி கடந்த 2ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் இளைஞர்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் புத்தக வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்த புத்தக கண்காட்சியில் 230க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் விரும்பி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் அனைத்திற்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. தினந்தோறும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் என பலதரப்பட்ட மக்களும் இந்த புத்தக கண்காட்சியை பார்வையிட்டு பயன் பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் பி.டி.தங்கவேல் வழிகாட்டுதலின் படி, கல்லூரி முதல்வர் வாசுதேவன் இந்த புத்தக கண்காட்சியை பார்வையிடவும், நூல்களை வாங்குவதற்கும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
அதன்படி, நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையின் சார்பில், கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
இக்கண்காட்சியில் கல்லூரி பாடநூல்கள், பொது அறிவு, போட்டித்தேர்வுகள், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம், தன்னம்பிக்கை, புதினங்கள், கவிதைகள் உள்ளிட்ட தலைப்புகளில் நூல்கள் இடம்பெற்றன. அப்போது, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நூலகர் செந்தூர் வேல்முருகன் செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu