தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை
X

ஈரோடு மாவட்டம் அந்தியூரில்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

சித்த மருத்துவபல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், தாமரைக்கரையில் இன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ் மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பர்கூர் மலைப்பகுதியில் புதிய நடமாடும் மருத்துவக்குழு சேவை, புதிய 108 அவசர ஊர்தி சேவை, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு புதிய தாய் சேய் நல ஊர்தி சேவை மற்றும் புதிய அமரர் ஊர்தி சேவை ஆகியவற்றினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவத் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அண்மையில் சித்த மருத்துவப் பிரிவில் 237 மருந்தாளுநர் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டன. இந்தியாவிலேயே சித்த மருத்துவத்திற்கு என தமிழகத்தில் தனியாக பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி, நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது மாணவர்கள் சேர்க்கை எவ்வாறு நடத்தப்படும் என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதால், சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆளுநருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் முதல்வர் விரைவில் துவக்கி வைப்பார்.

தமிழகத்தில் 100 சித்த மருத்துவமனைகள் தொடங்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சித்த மருத்துவமனைக்கான புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இவை, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் ஒப்படைக்கப்படும்.

மேலும், தமிழக அரசால் தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சுமார் 94,40,726 பேர் பயனடைந்துள்ளனர். விரைவில் 1 கோடி என்ற மகத்தான சாதனை எட்டப்படும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மலை கிராமங்களில் காணொளி வாயிலாக நோய் கண்டறிந்து அதற்கான மருந்து, மாத்திரைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரூ.64 கோடியில் உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்துதல், ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் பவானி அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம், கோபிசெட்டிபாளையம் ரூ.6.89 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைக்கான பராமரிப்பு மைய கட்டிடம் போன்ற 20 மருத்துவ கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.

பணிகள் முடிந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் ஆணையால், ஒப்பந்த மற்றும் அவுட் சோர்சிங் மூலம் பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய முடியவில்லை. தமிழ்நாடு முழுவதும் மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்குரிய நோய் தன்மை குறித்து ஹெல்த் ரெஜிஸ்ட்ரி மென்பொருள் மூலம் தனி செயலி உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்றார்‌ அவர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!